“சிஎஸ்கே இந்த தப்பை மட்டும் செஞ்சுறாதீங்க.. ஹர்திக் பாண்டியா ஒரு மோசமான..” சடகோபன் ரமேஷ் பேச்சு
சென்னை: 2027 ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் பரிமாற்றம் குறித்த பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ள நிலையில், ஹர்திக் பாண்டியாவை சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி வாங்கக் கூடாது என்று முன்னாள் இந்திய வீரர் சடகோபன் ரமேஷ் எச்சரித்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாகவும் ஆல்-ரவுண்டராகவும் சொதப்பிய ஹர்திக் பாண்டியா, அந்த அணியில் இருந்து விலக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவரை வாங்க சிஎஸ்கே ஆர்வம் காட்டி வருவதாகக் கூறப்படும் நிலையில், தனது யூடியூப் பக்கத்தில் பேசிய சடகோபன் ரமேஷ், "சிஎஸ்கே அணிக்கு மிடில் ஆர்டரில் ஒரு சிறந்த ஆல்-ரவுண்டர் தேவை என்பது உண்மைதான். ஆனால், அதற்காக சிவம் துபே, ஆயுஷ் மத்ரே மற்றும் டெவால்ட் பிரெவிஸ் போன்ற இளம் வீரர்களை மும்பை இந்தியன்ஸ் அணிக்குக் கொடுத்துவிட்டு ஹர்திக்கை வாங்கக் கூடாது. எந்த சூழ்நிலையிலும் சிஎஸ்கே தனது இளம் வீரர்களை இழக்கக் கூடாது" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ஹர்திக் பாண்டியாவை ஒரு வீரராக வேண்டுமானால் சிஎஸ்கே பயன்படுத்தலாம், ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் அவரை கேப்டனாக நியமிக்கக் கூடாது என்று சடகோபன் ரமேஷ் எச்சரித்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "ஹர்திக்கை நான் ஒரு சிறந்த வீரராகப் பார்க்கிறேன், ஆனால் அவர் ஒரு மோசமான கேப்டன். அவர் குஜராத் டைட்டன்ஸ் அணிக்குக் கோப்பையைப் பெற்றுத் தந்தார் என்றாலும், அவர் அங்கிருந்து விலகிய பிறகும் அந்த அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறிச் சாதித்தது. ஆனால், அவர் கேப்டனாகப் பொறுப்பேற்ற மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த சீசன்களில் புள்ளிப்பட்டியலில் 9 மற்றும் 10-வது இடங்களுக்குச் சரிந்தது" என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்டியா தனது திறமையைச் சரியாகப் பயன்படுத்தவில்லை என்றும் குற்றம் சாட்டினார் சடகோபன் ரமேஷ். "ஹர்திக் பாண்டியா கடந்த சீசனில் 10 போட்டிகளில் வெறும் 22 ஓவர்கள் மட்டுமே வீசியுள்ளார். முக்கியமான ஓவர்களை அவர் வீசவில்லை, பேட்டிங்கிலும் மிகவும் பின் வரிசையில் களம் இறங்கினார். குஜராத் அணியில் ஆஷிஷ் நெஹ்ரா கொடுத்த அழுத்தமே அவரை சிறப்பாகச் செயல்பட வைத்தது. ஹர்திக்கிடம் இருந்து சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டு வர ஒரு சிறந்த கேப்டனும், தகுதியான பயிற்சியாளரும் தேவை" என்று கூறினார் சடகோபன் ரமேஷ்.


Click it and Unblock the Notifications

