ஐபிஎல் போட்டியில் ஊக்கமருந்து ..பிரதீப் சங்வானுக்கு 18 மாதம் தடை: பிசிசிஐ அறிவிப்பு
மும்பை: ஐபிஎல் போட்டிகளின் போது ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரதீப் சங்வானுக்கு 18 மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது.
6வது ஐபிஎல் போட்டிகளின் போது மேட்ச் பிக்சிங், பெட்டிங் என பரபரப்பு புகார்கள் எழுந்த நிலையில் புதிய பிரச்சனையாக ஊக்க மருந்து சோதனை விவகாரம் வெடித்தது. போட்டியின் போது குறிப்பிட்ட வீரர்களுக்கு ஆட்டத்தின் முன்பாகவும், பிறகும் சிறுநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஊக்கமருந்து சோதனை நடத்தப்படுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.
ஐபிஎல் போட்டிகளின் போதான ஊக்கமருந்து பரிசோதனையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரதீப் சங்வான் சிக்கினார். அவர் தடை செய்யப்பட்ட போதை மருந்துகளை பயன்படுத்தியது தெரியவந்தது.

18 மாதம் தடை
இதைத் தொடர்ந்து தற்போது பிரதீப் சங்வான் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க 18மாத தடை விதித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இன்று உத்தரவிட்டுள்ளது.

யார் இந்த சங்வான்?
2008-ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பிடித்தவர். அந்த ஜூனியர் உலக கோப்பையில் அவர் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். உள்ளூர் கிரிக்கெட்டில் டெல்லி அணிக்காக விளையாடிய அவர் 38 முதல்தர கிரிக்கெட் போட்டியில் விளையாடி 123 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

ஐபிஎல் போட்டிகளில்..
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 2008 முதல் 2010-ம் ஆண்டு வரை டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடி 29 விக்கெட்டுகளை வீழ்த்தினார் சாங்வான்

கொல்கத்தா அணிக்காக
அதன் பின்னர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு தாவினார். கடந்த போட்டியில் அப்படி ஒன்றும் சங்வான் சோபிக்கவில்லை.

2வது வீரர்
ஐ.பி.எல். வரலாற்றில் ஒரு வீரர் ஊக்கமருந்தில் மாட்டிக்கொண்டது இது 2-வது முறையாகும்.

பாகிஸ்தான் வீரர்
2008-ம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடிய பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆசிப் ஊக்கமருந்து சோதனையில் சிக்கினார்.


Click it and Unblock the Notifications