சமீப காலமாக சச்சின் டெண்டுல்கரின் அதிக சதம் அடித்த சாதனையை விராட் கோலி முறியடிக்கக் கூடாது என்று தான் அவருக்கு போட்டிகளில் அதிகமாக ஓய்வு அளிக்கப்படுகிறது என்ற வதந்தி பரவி வருகிறது.
இந்த நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரின் அதிக சதம் அடித்த சாதனையை விராட் கோலியால் முறியடிக்க முடியாது என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் சமீபத்தில் கூறி இருக்கிறார்.

விராட் கோலி அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் உலகின் சிறந்த கிரிக்கெட் வீரராக இருக்கிறார். எந்த ஃபார்மேட்டாக இருந்தாலும், அணியை வெற்றிபெறச் செய்ய அவர் தனது முழு திறனையும் வெளிப்படுத்துகிறார்.
தற்போதைய நிலையில், சச்சின் டெண்டுல்கரின் அதிக சதங்களின் சாதனையை உலக கிரிக்கெட்டில் முறியடிக்கக்கூடிய ஒரே வீரர் விராட் கோலி மட்டுமே. சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தமாக 77 சதங்கள் அடித்துள்ள கோலி, சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க இன்னும் 24 சதங்கள் மட்டுமே அடிக்க வேண்டும். அதை அவர் இன்னும் இரண்டு, மூன்று ஆண்டுகளில் செய்து விடுவார் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ஒருநாள் போட்டிகளில் சச்சினின் அதிக சதங்கள் சாதனையை கோலி எளிதாக முறியடித்து விடுவார். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் சாதனையை முறியடிக்க கடுமையாக போராட வேண்டும். கோலி தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் 29 சதங்களை அடித்துள்ளார். சச்சினின் டெஸ்ட் சதங்களின் எண்ணிக்கையை தொட அவருக்கு இன்னும் 22 சதங்கள் வேண்டும்.
இது குறித்து பேசிய சஞ்சய் மஞ்ச்ரேகர், "டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் 51 சதங்கள் அடித்துள்ளார். சுனில் கவாஸ்கரை விட 17 சதங்கள் அதிகமாக அடித்துள்ளார். ஒரு நல்ல வீரருக்கு டெஸ்ட் கிரிக்கெட்டை விட ஒருநாள் போட்டியில் ரன் குவிப்பது எளிதானது. காரணம், ஒருநாள் போட்டியில் பந்து வீச்சாளர்கள் எப்போதும் விக்கெட்டுகளை வீழ்த்த முயற்சிப்பதில்லை. டெண்டுல்கர், கோலி இருவருமே சிறப்பு வாய்ந்தவர்கள். அவர்கள் பல டெஸ்ட் சதங்களை அடித்து இருக்கிறார்கள். ஆனாலும், சச்சினின் 51 டெஸ்ட் சதங்களை எட்டுவது கோலிக்கு மிகவும் கடினமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்" எனக் கூறினார்.
விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் 47 சதங்களும், டெஸ்ட் கிரிக்கெட்டில் 29 சதங்களும், டி20யில் ஒரு சதமும் அடித்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் சாதனையை கோலி நிச்சயம் முறியடிப்பார். ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டில் அது கடினம்.
சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் கிரிக்கெட்டில் 49 சதங்களை அடித்துள்ளார். இந்த சாதனையை முறியடிக்க கோலிக்கு இன்னும் 3 சதங்கள் மட்டுமே தேவை என்பது குறிப்பிடத்தக்கது. 2023 உலகக்கோப்பையிலேயே கோலி இதை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.