சென்னை: சச்சின் டெண்டுல்கரின் ஒரு வரலாற்று சிறப்புமிக்க இன்னிங்ஸ் தானும் இந்திய அணிக்கு கிரிக்கெட் ஆடலாம் என்ற எண்ணத்தை எப்படி விதைத்தது என்பது குறித்து இந்திய டி20 அணியின் நட்சத்திர வீரரான சஞ்சு சாம்சன், ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு அளித்த பேட்டியில் கூறி இருக்கிறார்.
மேலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் நுழைய ஸ்ரீசாந்த் செய்த உதவி குறித்தும் சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். மேலும், தனது கிரிக்கெட் பயணத்தின் திருப்புமுனையாக அமைந்த தருணங்களை நினைவு கூர்ந்தார் சஞ்சு சாம்சன்.

1998 ஆம் ஆண்டு ஷார்ஜாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற கோका-கோலா கோப்பை போட்டியில் சச்சின் டெண்டுல்கர் விளையாடிய 'டெசர்ட் ஸ்டார்ம்' இன்னிங்ஸ் தான் தன்னை கிரிக்கெட்டை நோக்கி ஈர்த்ததாக சஞ்சு சாம்சன் கூறியுள்ளார். அந்தப் போட்டியை டெல்லியில் உள்ள காவலர் குடியிருப்பு ஒன்றில் ஒரு சிறிய டிவியில் பார்த்ததாக அவர் குறிப்பிட்டார்.
டேமியன் பிளெமிங், ஷேன் வார்ன் போன்ற பலம் வாய்ந்த பந்துவீச்சாளர்களை சச்சின் எதிர்கொண்டு ரன்களைக் குவித்த விதம், 'சஞ்சு, உன்னாலும் இதுபோல ஒரு நாள் நாட்டிற்காக விளையாட முடியும்' என்ற நம்பிக்கையை தனக்குள் விதைத்ததாக சாம்சன் உணர்ச்சிப்பூர்வமாக தெரிவித்தார். அந்தப் போட்டியில் சச்சின் 131 பந்துகளில் 143 ரன்கள் குவித்தார். இந்தியாவின் வெற்றிக்கு அந்த ஆட்டம் உதவவில்லை என்றாலும், இந்தியாவை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற வைத்தது.
சஞ்சு சாம்சனின் கிரிக்கெட் வாழ்க்கையில், குறிப்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியில் அவர் நுழைவதற்கு, முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் முக்கிய காரணமாக இருந்துள்ளார். தொடக்கத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியில் 2012-ல் சாம்சன் இருந்தாலும், அவருக்கு ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.
14 வயதில் தான் ராகுல் டிராவிட்டை பார்த்த போது அவர் இடைவிடாமல் பயிற்சி செய்து கொண்டே இருந்தார் எனவும், பின்னர் 17 வயதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர்கள் சோதனையில் கலந்து கொண்ட போது மீண்டும் டிராவிட்டை பார்த்ததாக சஞ்சு குறிப்பிட்டார். அப்போது கேரள ரஞ்சி அணியில் தனது சக வீரராக இருந்த ஸ்ரீசாந்த், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சோதனை ஓட்டத்திற்கு (trials) தன்னை அழைத்துச் சென்றதாக சாம்சன் கூறினார்.
ஒருமுறை ரஞ்சி தொடரில் சஞ்சு சாம்சன் பெயர் இல்லாததைக் கண்ட டிராவிட், கேரளா மாநில தேர்வாளர்களிடம், "சஞ்சு சாம்சன் ஏன் ஆடவில்லை?" கேள்வி எழுப்பி இருக்கிறார். அடுத்த நாளே அவரை ஆந்திராவுக்கு எதிரான போட்டியில் விளையாட வைத்ததாகவும், அந்தப் போட்டியில் தான் டிராவிட் முன் சதம் அடித்து அசத்தியதாகவும் கூறினார் சஞ்சு சாம்சன்.
ஸ்ரீசாந்தின் உதவியால் கிடைத்த இரண்டு நாள் சோதனையில், சாம்சன் தனது அபாரமான பேட்டிங் திறமையால் ராகுல் டிராவிட்டை வெகுவாகக் கவர்ந்தார். சாம்சனின் ஆட்டத்தைப் பார்த்த டிராவிட், "நீ சிறப்பாக விளையாடுகிறாய். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாட விரும்புகிறாயா?" என்று கேட்டது தனக்கு மிகப்பெரிய நம்பிக்கையை அளித்ததாக சாம்சன் நினைவு கூர்ந்தார்.
2013-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தனது ஐபிஎல் பயணத்தைத் தொடங்கிய சாம்சன், சில ஆண்டுகள் டெல்லி அணிக்காக விளையாடிய பின்னர், 2018-ல் மீண்டும் ராஜஸ்தான் அணிக்கே திரும்பினார். 2021-ல் அந்த அணியின் கேப்டனாகவும் உயர்ந்தார்.