கோவா: கிரிக்கெட் உலகின் 'கடவுள்' என்று கொண்டாடப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். களத்தில் மட்டுமல்ல, நிஜ வாழ்விலும் மிக ஒழுக்கமானவர், எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர் என்ற நற்பெயர் அவருக்கு உண்டு. ஆனால், 2026 புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சச்சினின் மகள் சாரா டெண்டுல்கர் சிக்கிய ஒரு விவகாரம் இப்போது இணையத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
சமூக வலைதளங்களில் எப்போதும் பரபரப்பாக இருக்கும் சாரா, கோவாவில் தனது நண்பர்களுடன் புத்தாண்டைக் கொண்டாடிய வீடியோ ஒன்று வெளியாகி, தற்போது நெட்டிசன்களின் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

சாரா டெண்டுல்கர் கோவாவில் தனது நண்பர்களுடன் ஜாலியாக புத்தாண்டைக் கொண்டாடினார். பிங்க் நிற பூக்கள் போட்ட அழகான உடை அணிந்து, கோவா வீதிகளில் அவர் சாதாரணமாக நடந்து செல்லும் வீடியோவை வழிப்போக்கர் ஒருவர் எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், சாரா டெண்டுல்கர் கையில் ஒரு பீர் பாட்டில் இருப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது தான் பிரச்சனைக்குக் காரணம். "சச்சின் மகள் கையில் மது பாட்டிலா?" என்று இணையவாசிகள் கேள்விகளை எழுப்பத் தொடங்கிவிட்டனர்.
சச்சின் டெண்டுல்கர் தனது வாழ்நாளில் மது அருந்தியது கிடையாது. ஏன், மதுபான விளம்பரங்களில் நடிக்க கோடிக்கணக்கில் பணம் தருவதாகச் சொன்னாலும், "என் கையில் பேட் இருக்கும் வரை என் கொள்கையை மாற்ற மாட்டேன்" என்று மறுத்தவர் அவர்.
அப்படிப்பட்டவரின் மகள், இப்படி பொதுவெளியில் மது பாட்டிலுடன் சுற்றுவதா? என்று 'கலாச்சார காவலர்கள்' சிலர் சாராவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். "அப்பா பெரிய லெஜண்ட், ஆனா மகளுக்குச் சரியான ஒழுக்கங்களை கற்றுத்தரவில்லையா?" என்று காட்டமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
ஒரு பக்கம் விமர்சனங்கள் வந்தாலும், மறு பக்கம் சாராவுக்கு ஆதரவாகவும் பலர் குரல் கொடுத்து வருகின்றனர். "சாரா ஒன்றும் சின்னக் குழந்தை இல்லை. அவர் ஒரு சுதந்திரமான பெண்மணி. சச்சின் குடிக்க மாட்டார் என்பதற்காக, சாராவும் குடிக்கக் கூடாது என்று என்ன சட்டம் இருக்கிறது? இது அவருடைய தனிப்பட்ட விருப்பம். அவர் ஒன்றும் பொது இடத்தில் கலாட்டா செய்யவில்லையே, சும்மா கையில் தானே வைத்திருக்கிறார். இதையெல்லாம் பெரிதுபடுத்தாதீர்கள்" என்று விமர்சனம் செய்பவர்களுக்குப் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்த சர்ச்சைகள் ஒருபுறம் இருக்க, சாரா டெண்டுல்கர் சிறிய அளவில் தொழில்முனைவோராகவும் இருக்கிறார் என்பது பலருக்குத் தெரியாது. அவர் ஒரு ஊட்டச்சத்து நிபுணர். சமீபத்தில் துபாய் மற்றும் மும்பையில் "Pilates Academy X Sara Tendulkar" என்ற உடற்பயிற்சி நிலையத்தைத் தொடங்கியுள்ளார். மேலும், சச்சின் டெண்டுல்கர் ஃபவுண்டேஷனில் இயக்குனராகவும் இருந்து சமூகப் பணிகளைச் செய்து வருகிறார்.