மும்பை: ரஞ்சி டிராபி தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் சர்ப்ராஸ் கான் இந்திய அணியில் தேர்வு செய்யப்படாததற்கு காரணம் குறித்து பிசிசிஐ நிர்வாகி வெளியிட்டுள்ள தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பாக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான அணி அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் ரஞ்சி டிராபி தொடரி சிறப்பாக செயல்பட்டு வரும் சர்ப்ராஸ் கான் மற்றும் அபிமன்யூ ஈஸ்வரன் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்படாதது இந்திய கிரிக்கெட்டில் புயலை கிளப்பியுள்ளது.

ஏனென்றால் தொடர்ச்சியாக 3 சீசன்களில் சர்ப்ராஸ் கான் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முன்னிலையில் இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் சர்ப்ராஸ் கானின் சராசரி 100க்கும் அதிகமாக உள்ளது. இருப்பினும் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை. இதுகுறித்து சுனில் கவாஸ்கர், அபினவ் முகுந்த், அகர்கர் உள்ளிட்ட ஏராளமான வீரர்கள் கடுமையான விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சர்ப்ராஸ் கான் தேர்வு செய்யப்படாததற்கான காரணம் குறித்து பெயர் சொல்ல விரும்பாத பிசிசிஐ நிர்வாகி ஒருவர் சில தகவல்களை கூறியுள்ளார். அதில், இந்திய அணிக்காக இளம் வீரர் சர்ப்ராஸ் கான் தேர்வு செய்யப்படாததற்கு அவரின் ஃபிட்னஸ் முக்கியக் காரணமாகும். அவரின் உடல் எடையை குறைக்க வேண்டும். சர்வதேச கிரிக்கெட்டுக்கான ஃபிட்னஸ் இல்லை. அதேபோல் களத்திலும் களத்திற்கு வெளியேயும் சர்ப்ராஸ் கானின் சில செயல்கள் எல்லைகளை மீறியுள்ளது.
அதுவும் அவரை தேர்வு செய்யாததற்கு காரணமாக இருக்கிறது. போட்டியின் போது ஆக்ரோஷமாக கொண்டாடுவதை பார்த்து வருகிறோம். கிரிக்கெட் வீரர்கள் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சர்ப்ராஸ் கான் வேண்டுமென்றே பழி வாங்கப்படுகிறாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். டெல்லி அணிக்கு எதிரான போட்டியின் போது சதம் விளாசிய சர்ப்ராஸ் கான், அப்போதைய தேர்வுக் குழு தலைவராக இருந்த சேத்தன் சர்மாவை நோக்கி கைகளை நீட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.