மும்பை : சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜாவிடம் மூன்று முறை ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு ஆண்டு தோறும் ஊக்க மருந்து சோதனை நடத்தப்படுவது வழக்கம்.
அந்த வகையில் இந்தியாவில் இம்முறை 55 கிரிக்கெட் வீரர்களுக்கு ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டு இருக்கிறது. இதில் போட்டியில் பங்கேற்காமல் காயத்திலிருந்து விடுபடும் வீரர்களுக்கு என தனி கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி ஜடேஜா கடந்த ஆசிய கோப்பை தொடரில் காயம் அடைந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தான் அவர் இந்திய அணிக்கு திரும்பினார். சுமார் ஆறு மாதம் காலம் அவர் எந்த கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்காமல் இருந்தார். இந்த நிலையில் தான் அவருக்கு மூன்று முறை ஊக்க மருந்து பரிசோதனை நடத்தப்பட்டு இருக்கிறது.
அதுவும் பிப்ரவரி 19, மார்ச் 6 மற்றும் ஏப்ரல் 26 என ஐபிஎல் தொடர் நடைபெறும் போது மட்டும் இரண்டு முறை ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டு இருக்கிறது. எனினும் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் ஊக்க மருந்து பரிசோதனைகளில் இருந்து தப்பித்து இருக்கிறார்கள். ஹர்திக் பாண்டியா டெஸ்ட் போட்டிகளில் விளையாடாத நிலையில் அவருக்கு ஒரு முறை ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டு இருக்கிறது.

இதேபோன்று ஐபிஎல் தொடரில் பங்கேற்க வந்த ஆஸ்திரேலிய வீரர்கள் கேமரான் கிரீன், டேவிட் வார்னர் மற்றும் தென்னாப்பிரிக்கா வீரர் டேவிட் மில்லர், வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் சுனில் நரேன் ரசூல் போன்ற வீரர்களுக்கும் ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டுள்ளது. கிரிக்கெட் வீரர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் இதுவரை யாருக்கும் பாசிட்டிவ் என ரிசல்ட் வரவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது எல்லாம் எந்த வீரரும் ஊக்க மருந்தை வேண்டும் என்று எடுத்துக் கொள்வது கிடையாது. மருத்துவம் சிகிச்சைக்காக எடுக்கப்படும் மாத்திரைகளில் சில தடை செய்யப்பட்ட மருந்துகள் கலக்கப்பட்டு இருந்தால், இது போன்று சோதனையில் சிக்க நேரிடும். இவ்வாறு தான் இந்திய அணியின் இளம் வீரர் பிரித்வி ஷா சிக்கி ஆறு மாதம் காலம் வரை கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காமல் தடை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.