மும்பை அணியின் கேப்டன் அதிரடி மாற்றம்.. 34 வயதான வீரர் புதிய கேப்டனாக நியமனம்
மும்பை: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூர் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, அனுபவ கிரிக்கெட் வீரர் சித்தேஷ் லாட் வரவிருக்கும் புதிய சீசனுக்கான கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஷர்துல் தாக்கூரின் பணிச்சுமையைக் குறைத்து, அவரது திறனைச் சீராக நிர்வகிக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2025-26 ரஞ்சி கோப்பை சீசனில் அஜிங்க்யா ரஹானேவிடமிருந்து மும்பை அணியின் கேப்டன் பொறுப்பை ஷர்துல் தாக்கூர் ஏற்றார். அவரது தலைமையின் கீழ் மும்பை அணி கால் இறுதிச் சுற்று வரை முன்னேறியது. இந்நிலையில், அடுத்த சீசனுக்கான புதிய கேப்டனாக சித்தேஷ் லாட் நியமிக்கப்பட்டுள்ளதை மும்பை கிரிக்கெட் சங்கத்தின் மூத்த நிர்வாகி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

கோவா அணிக்காக விளையாடிவிட்டு, ஓராண்டு இடைவெளிக்கு பிறகு கடந்த 2024-25 சீசனில் சித்தேஷ் லாட் மீண்டும் மும்பை அணிக்குத் திரும்பினார். கடந்த ரஞ்சி கோப்பை தொடரில் அவர் பேட்டிங்கில் மிகச் சிறந்த ஃபார்மில் இருந்தார். விளையாடிய 8 போட்டிகளில் 5 சதங்கள் மற்றும் ஒரு அரைசதம் உட்பட 77.40 சராசரியுடன் 774 ரன்களைக் குவித்து அசத்தினார்.
இந்த அபாரமான செயல்பாடே அவருக்கு கேப்டன் பொறுப்பை தேடித்தந்துள்ளது.ரஞ்சி கோப்பை வரலாற்றில் 42 முறை சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ள மும்பை அணி, இந்த ஆண்டின் தனது முதல் லீக் போட்டியில் சண்டிகர் அணியை அக்டோபர் 11 அன்று எதிர்கொள்கிறது.
ரஞ்சி கோப்பையில் மும்பை அணி கடைசியாக 2023-24 சீசனில் 42வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. அதன் பிறகு கடந்த 2 சீசன்களாக மும்பை அணி கோப்பையை வெல்லாத நிலையில், இந்த அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications

