
ஏமாற்றிய மோர்கன்
இதில், ஷுப்மன் கில் சிறப்பாக ஆட்டத்தை தொடங்கினாலும், முடியவில்லை. 7 ரன்களில் அர்ஷ்தீப் பந்தில் ஸ்டெம்ப்புகள் தெறிக்க போல்டானார். பிறகு வெங்கடேஷ் ஐயருடன் திரிபாதி ஜோடி சேர்ந்தார். இருவரும் மிக மிக நேர்த்தியாக அருமையான பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தனர். சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த வெங்கடேஷ் ஐயர், 49 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில், 9 பவுண்டரிகளும் 1 சிக்ஸரும் அடங்கும். ராகுல் திரிபாதி 26 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து கேட்ச்சானார். கேப்டன் இயன் மோர்கன் வழக்கம் ஸ்டேடியத்திற்குள் வந்து சுற்றிப்பார்த்துவிட்டு, ஷமி ஓவரில் 2 ரன்களில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார்.

மாயங்க் தாக்கம்
இறுதிக் கட்டத்தில், பெரிய ஹிட்டர்கள் இல்லாததால், கொல்கத்தா அணியால் ரன்கள் பெரிதாக குவிக்க முடியவில்லை. தினேஷ் கார்த்திக் 11 ரன்களில் போல்டானார். இதனால், கொல்கத்தா 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. பஞ்சாப் சார்பில் அர்ஷ்தீப் சிங், 4 ஓவர்கள் வீசி 32 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ரவி பிஷ்னாய் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணியில், மாயங்க் அகர்வால் மீண்டும் பிளேயிங் லெவனில் திரும்பியதன் தாக்கம் இன்று பலமாக எதிரொலித்தது.

அடுத்த சீசன் சந்தேகமே
முதல் விக்கெட்டுக்கு லோகேஷ் ராகுல் - மாயங்க் ஜோடி 70 ரன்கள் எடுத்தது. இதில், லோகேஷ் ராகுல் சற்று அடக்கி வாசிக்க, மாயங்க் கொல்கத்தா பவுலர்கள் பந்துகளை பறக்கவிட்டுக் கொண்டிருந்தார். எனினும், அவர் 27 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து வருண் சக்கரவர்த்தி ஓவரில் கேட்ச் ஆனார். இதையடுத்து களமிறங்கிய நிகோலஸ் பூரன், இந்த ஆட்டத்திலாவது ஏதாவது அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவரும் ஒரு அருமையான சிக்ஸ் அடித்தார். ஆனால், வருண் ஓவரில் தேவையே இல்லாமல் தூக்கி அடித்து கேட்ச் கொடுத்து 12 ரன்களில் நடையைக் கட்டினார். அவர் ஒரு மேட்சில் கூட 10 ரன்கள் எடுப்பதில்லை. ஆனால், அவரது பவர் ஹிட் எபிலிட்டி காரணமாக கேப்டன் லோகேஷ் ராகுல் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கி வருகிறார். ஆனால், பூரன் உண்மையில் அந்த வாய்ப்புகளை வீணடித்து வருகிறார் என்பதே உண்மை. அடுத்த சீசனில் பூரன் பஞ்சாப் அணியில் மட்டுமல்ல, ஐபிஎல் ஏலத்தில் ஏலம் எடுக்கப்படுவதே சந்தேகம் தான்.

மார்க்ரம் சறுக்கல்
இதன் பிறகு, இனி எதுவும் வேலைக்கு ஆகாது என்பதை உணர்ந்த கேப்டன் லோகேஷ் ராகுல், 43 பந்துகளில் தனது அரைசதத்தை நிறைவு செய்தார். சிறப்பாக விளையாடத் தொடங்கிய எய்டன் மார்க்ரம், 16 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து சுனில் நரைன் ஓவரில் கேட்ச்சானார். அந்த ஓவரில் தான் மார்க்ரம் 90 மீட்டர் சிக்ஸ் ஒன்றை அடித்திருந்தார். ஆனால், மீண்டும் சிக்ஸ் அடிக்க நினைத்து, சிக்ஸ் லைனில் அவர் கேட்ச்சாகி வெளியேறினார். இதையடுத்து, கடைசி 4 ஓவரில் பஞ்சாப் வெற்றிக்கு 35 ரன்கள் தேவைப்பட்டது. அதாவது, 24 பந்துகளில் 35 ரன்கள். களத்தில் லோகேஷ் ராகுல், தீபக் ஹூடா இருந்தனர்.

அபார சிக்ஸ்
17வது ஓவரை வீசிய மாவி ஓவரில் சிக்ஸ் அடிக்க நினைத்த தீபக் ஹூடா, 3 ரன்களில் அவுட்டாக பஞ்சாப் அணி 134 ரன்களுக்கு நான்காவது விக்கெட்டை இழந்தது. பிறகு தமிழக வீரர் ஷாருக் கான் களமிறங்க, 2 பந்துகளில் ஒரு சிக்ஸ் உட்பட 8 ரன்கள் குவித்து அந்த ஓவரை நிறைவு செய்தார். பஞ்சாபின் பிரஷர் அப்படியே குறைந்தது. மாவி ஓவரில் அவர் அடித்த சிக்ஸரை, எல்லையில் நின்றிருந்த வெங்கடேஷ் ஐயர் அபாரமான ஃபீல்டிங்கால் தடுத்தாலும், அதை முழுவதுமான அவரால் தடுத்து நிறுத்த முடியவில்லை. இதனால் வெங்கடேஷ் ரொம்பவே ஏமாற்றமடைந்தார். ஆனால், உண்மையில் வெங்கடேஷுக்கு ஒரு க்ளாப்ஸ் கொடுக்கலாம்.

பிளே ஆஃபில் டெல்லி
எனினும், 19வது ஓவரில் 52 பந்துகளில் 62 ரன்கள் எடுத்திருந்த லோகேஷ் ராகுல், மாவி ஓவரில் திரிபாதியின் அபாரமான கேட்ச் காரணமாக வெளியேறினார். ஆனால், மூன்றாம் நடுவர் அதனை சோதனை செய்த போது, நாட் அவுட் என்று தெரியவந்தது. கடைசி ஓவரை வெங்கடேஷ் ஐயர் வீச, லோகேஷ் ராகுல் 67 ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனால், ஆட்டம் இன்னும் பரபரப்பானது. எனினும், தமிழக வீரர் ஷாருக் கான் அடுத்த பந்தை தூக்கி சிக்ஸர் அடிக்க, பஞ்சாப் 19.3வது ஓவரில் 168 ரன்கள் எடுத்து, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இதனால், அந்த அணி பிளே ஆஃப் வாய்ப்பையும் தக்க வைத்துள்ளது. 12வது போட்டியில் ஆடியுள்ள பஞ்சாப் அணிக்கு இது 5வது வெற்றியாகும். அதேசமயம், 12 வது போட்டியில் விளையாடியுள்ள 7வது தோல்வியை பதிவு செய்துள்ளது. அதேசமயம், பஞ்சாப் அணியின் வெற்றியால், டெல்லி கேபிட்டல்ஸ் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப் பெற்று விட்டது.


Click it and Unblock the Notifications