மும்பை: உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டத்தில் நம் இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்களும் சளைத்தவர்கள் அல்ல. சமூக வலைதளங்களில் அவர்கள் பகிர்ந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தை கலக்கி வருகின்றன. மைதானத்தில் 'கப்பார் சிங்' ஆக மிரட்டும் ஷிகர் தவான், நிஜ வாழ்க்கையில் மிகவும் ஜாலியான மனிதர் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த முறை கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அவர் பகிர்ந்துள்ள ஒரு புகைப்படம் தான் இப்போது அதிகம் ரசிகர்களை ஈர்த்துள்ளது.
இந்திய அணியின் முன்னாள் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான், தனது பார்ட்னரான சோஃபி ஷைன் உடன் இணைந்து கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அயர்லாந்தை பூர்வீகமாகக் கொண்ட சோஃபி, ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) பணியாற்றி வருகிறார்.

கிறிஸ்துமஸ் மரத்தின் பின்னணியில், சோஃபியுடன் மிக நெருக்கமாக நின்று ஷிகர் தவான் பகிர்ந்துள்ள இந்தப் புகைப்படம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. "வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கட்டும்" என ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். ஷிகர் தவானின் இந்த 'ரொமான்டிக்' கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
ஷிகர் தவான் ஒருபுறம் என்றால், கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கர் மறுபுறம் அழகான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். சச்சின் தனது வீட்டில் வளர்க்கும் இரண்டு செல்ல நாய்க்குட்டிகளுக்கு உணவு அளித்து கிறிஸ்துமஸ் கொண்டாடியுள்ளார்.
அந்தப் புகைப்படத்திற்கு கீழ் அவர் பகிர்ந்துள்ள செய்தி தான் அருமையாக இருந்தது. "நான் எப்போதுமே இவர்களுக்கு சாண்டா கிளாஸ் தான்.. ஏன்னா, நான் இவர்களிடம் வரும்போதெல்லாம் கையில் நொறுக்குத்தீனி கொண்டு வருவேன்!" எனத் தனது செல்லப் பிராணிகள் மீதான அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்திய அணியின் சிக்ஸர் மன்னன் யுவராஜ் சிங், தனது அழகான குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். சிரிப்பும் கும்மாளமுமாக இருக்கும் அந்தப் புகைப்படத்துடன், "எங்களிடமிருந்து உங்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்" என வெப்பமான வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் யுவி.
அதேபோல், விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ரசிகர்களுக்கு உருக்கமான செய்தியைப் பகிர்ந்துள்ளார். "இந்த பண்டிகைக் காலம் உங்கள் இல்லங்களில் அரவணைப்பையும், இதயங்களில் மகிழ்ச்சியையும் நிறைக்கட்டும். இந்த சந்தோஷம் ஆண்டு முழுவதும் நிலைத்திருக்கட்டும். இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்" என கோலி பதிவிட்டுள்ளார்.