சிஎஸ்கேவுக்கு எதிராக அதிக ரன்! கோலியை பின்னுக்கு தள்ள அந்த வீரருக்கு செம வாய்ப்பு!
மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள விராட் கோலியை முந்த ஷிகர் தவானுக்கு இன்னும் 41 ரன்கள் மட்டுமே தேவையாக உள்ளது. இந்த ரன்னை சிஎஸ்கேவுக்கு எதிரான இன்றைய போட்டியில் அவர் எட்டி சாதனை படைக்க வாய்ப்புள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி துவங்கி நடைபெற்று வருகிறது. இன்று இரவு 7.30 மணிக்கு துவங்கும் போட்டியில் ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியும், மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.
இன்று மோதும் பஞ்சாப், சென்னை என 2 அணிகளுக்கும் இது 3வது போட்டியாகும். முந்தைய 2 போட்டிகளிலும் சென்னை அணி இன்னும் வெற்றி கணக்கை துவங்கவில்லை. பஞ்சாப் அணி ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் உள்ளது.

சென்னை அணி
சென்னை அணியை பொறுத்தமட்டில் இந்த சீசனின் முதல் போட்டியில் 131 ரன்கள் எடுத்த நிலையில் கொல்கத்தா அணி 18.3 ஓவர்களில் 133 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. சென்னை தனது 2 வது போட்டியில் 210 ரன்கள் எடுத்தாலும் லக்னோ சூப்பர் ஜியான்ட்ஸ் அணியிடம் தோல்வியை தழுவியது. இந்த இலக்கை லக்னோ அணி 19.3 ஓவர்களில் எட்டி சென்னையை தோற்கடித்தது. இதனால் இன்றைய போட்டியில் சென்னை வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயம் உள்ளது.

பஞ்சாப் அணி
முதல் போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 205 ரன்களை 19வது ஓவரில் எட்டிப்பிடித்து வெற்றி பெற்றது. 2வது போட்டியில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 18.2 ஓவர்களில் வெறும் 137 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 14.3 ஓவரில் 141 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதனால் இன்றைய போட்டியில் வெற்றி பாதைக்கு திரும்ப பஞ்சாப் கிங்ஸ் அணி போராடும். பஞ்சாப் அணியை பொறுத்தமட்டில் துவக்க வீரர்களாக கேப்டன் மயங்க் அகர்வால், ஷிகர் தவான் ஆகியோர் இறங்குகின்றனர்.

சிஎஸ்கேவுக்கு எதிராக அதிக ரன்
இந்நிலையில் தான் இன்றைய போட்டியில் ஷிகர் தவான் புது சாதனையை எட்ட வாய்ப்புள்ளது. அதாவது ஐபிஎல்லில் சென்னை அணிக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) கேப்டன் விராட் கோலிக்கு அடுத்து 2வது இடத்தில் ஷிகர் தவான் உள்ளார். இதுவரை 908 ரன்கள் குவித்துள்ள ஷிகர் தவான் இன்னும 41 ரன்கள் எடுத்தால் விராட்கோலியை முந்தி விடுவார். இந்த போட்டியில் அவர் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் இந்த சாதனையை அவர் எட்டலாம்.

பவுண்டரி சாதனை
மேலும் டுவெண்டி20 போட்டியில் 1000 பவுண்டரிகள் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற மைல்கல்லையும் இந்த போட்டியின் மூலம் ஷிகர் தவான் பெறலாம். இதுவரை 993 பவுண்டரிகள் விளாசியுள்ள ஷிகர் தவானுக்கு இந்த சாதனையை நிகழ்த்த இன்னும் 7 பவுண்டரிகள் மட்டுமே தேவையாக உள்ளது.

இந்தியாவின் முதல் வீரர்
டுவெண்டி 20 போட்டிகளில் அதிக பவுண்டரிகள் விளாசிய வீரர்கள் பட்டியலில் 1132 பவுண்டரிகளுடன் முதலிடத்தில் கிறிஸ் கேல், 1054 பவுண்டரிகளுடன் அலெ க்ஸ் ஹால்ஸ் 2ம் இடத்திலும், 1005 பவுண்டரிகளுடன் டேவிட் வார்னர் மூன்றாம் இடத்திலும் உள்னர். இன்னும் 7 பவுண்டரிகள் விளாசினால் இந்த பட்டியலில் ஷிகர் தவான் 4வது வீரராக இணைவதோடு, 1000 பவுண்டரிகளை கடந்த இந்தியாவின் முதல் வீரர் என்ற பெருமையையும் பெறுவார். இதில் விராட் கோலி 917 பவுண்டரிகளும், மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா 875 பவுண்டரிகளும் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிக ரன்களில் 2ம் இடம்
ஐபிஎல்லில் தவான் தனிவீரராக அதிக ரன்கள் சேர்த்தவர்களின் பட்டியலிலில் 2ம் இடத்தில் உள்ளார். இவர் 5,843 ரன்கள் குவித்துள்ளார். இந்தியாவின் துவக்க ஆட்டக்காரரான ஷிகர் தவானை நடப்பு ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ.8.25 கோடிக்கு ஏலம் எடுத்தது.


Click it and Unblock the Notifications