"உலகக்கோப்பை பைனலில் ரன் குவித்தவரை பெஞ்ச்சில் உட்கார வைப்பீங்களா?”.. சிவம் துபே பற்றி ஆகாஷ் பேச்சு
ஹாமில்டன்: நியூசிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், ஆல்ரவுண்டர் சிவம் துபேவுக்கு ஒரு போட்டியில் கூட வாய்ப்பளிக்காமல் தொடர் முழுவதும் பெஞ்சில் அமர வைத்தது இந்திய அணி நிர்வாகம். இது பற்றி முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சனம் செய்துள்ளார். சிவம் துபே உலகக்கோப்பை உள்ளிட்ட பல இறுதிப் போட்டிகளில் சிறப்பாக ஆடி இருக்கிறார்; அவரை வெளியேற்ற முடியாது என ஆகாஷ் சோப்ரா கூறி இருக்கிறார்.
நியூசிலாந்தை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய அணி டி20 தொடரைக் கைப்பற்றியது. இந்தத் தொடரின் 5 போட்டிகளிலுமே இளம் வேகப் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டிக்கு வாய்ப்பளிக்கப்பட்டு சிவம் துபே தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டார். நிதிஷ் குமார் ரெட்டி பேட்டிங்கில் 71 ரன்களும், பந்துவீச்சில் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தி தனது பணியை சராசரியாகவே செய்தார்.

இது குறித்துப் பேசிய ஆகாஷ் சோப்ரா, "ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் இறுதிப்போட்டியில் ஆடி ரன் குவித்தவர் சிவம் துபே. இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் அவர் ஆடியுள்ளார். அப்படிப்பட்ட ஒரு வீரர் இனி அணிக்குத் தேவையில்லை என்று யாரும் திடீரென முடிவெடுத்துவிட முடியாது. அவரை அணியில் இருந்து முற்றிலும் நீக்கிவிட்டால் நான் ஆச்சரியப்படுவேன். பந்துவீச்சில் நிதிஷ் குமார் ரெட்டி சில ஓவர்களை வீசலாம், ஆனால் ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைக்கும் ஃபினிஷர் பாத்திரத்தில் சிவம் துபேதான் மிகச் சிறந்த வீரர்" என்றார்.
பெரிய ஆட்டங்களில் துபேவின் பங்களிப்பை சுட்டிக்காட்டிய அவர், "உலகக் கோப்பை இறுதிப்போட்டி, ஆசியக் கோப்பை, ஆசிய விளையாட்டுப் போட்டிகள் போன்ற முக்கியமான நாக் அவுட் ஆட்டங்களில் எல்லாம் தனது அசாத்திய திறமையை நிரூபித்தவர் சிவம் துபே. அதனால் அவரை அணியில் இருந்து அவசரமாக ஓரங்கட்ட நான் தயாராக இல்லை" என்று உறுதியாகக் கூறினார்.
2024 டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் 27 ரன்கள், 2025 ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக 33 ரன்கள், 2026 டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக 8 பந்துகளில் 26 ரன்கள் என நாக் அவுட் ஆட்டங்களில் மிரட்டிய துபேவை முழுமையாக வெளியே உட்கார வைத்தது குறித்து ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பியுள்ள நிலையில் இந்திய அணி நிர்வாகம் பதில் சொல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications

