முதலிடத்துலயே இருக்கறது அவ்வளவு ஈசி கிடையாது... ஆனா கோலிக்கு அது கைவந்த கலையா இருக்கு
டெல்லி : முதலிடத்தை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வது எளிதான செயலல்ல என்றும் ஆனால் கேப்டன் கோலிக்கு அது கைவந்த கலையாக இருப்பதாகவும் முன்னாள் மேற்கிந்திய தீவுகளின் பேட்ஸ்மேன் ஷிவ்நரைன் சந்தர்பால் கூறியுள்ளார்.
தற்போதைய காலகட்டத்தில் உலகின் மிகச்சிறந்த ஆட்டக்காரராக கோலி உள்ளதாகவும், தனக்கும் பிடித்த வீரர் கோலிதான் என்றும் கூறியுள்ளார்.
சமீபத்தில் துவங்கப்பட்டு, கொரோனா பாதிப்பால் கைவிடப்பட்ட சாலை பாதுகாப்பு உலக தொடர் 2020ல் பங்கேற்று ஷிவ்நரைன் சந்தர்பால் ஆடினார்.

மேற்கிந்திய வீரர் பங்கேற்பு
சமீபத்தில் டெல்லியில் சாலை பாதுகாப்பு உலக தொடர் 2020 நடத்தப்பட்டது. இதில் முன்னாள் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், மேற்கிந்திய வீரர் ஷிவ்நரைன் சந்தர்பால் ஆகியோர் பங்கேற்று ஆடினர். ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பை அடுத்து அந்த தொடர் கைவிடப்பட்டது. முன்னாள் வீரர்களின் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த தொடர் ரத்து செய்யப்பட்டதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

கோலி குறித்து புகழ்ச்சி
இந்த சாலை பாதுகாப்பு தொடரில் பங்கேற்று விளையாடிய மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் ஆட்டக்காரர் ஷிவ்நரைன் சந்தர்பால், தற்போதைய காலகட்டத்தில் உலகிலேயே இந்திய கேப்டன் விராட் கோலிதான் மிக சிறந்த ஆட்டக்காரராகவும் தனக்கு பிடித்த ஆட்டக்காரராகவும் விளங்குவதாக புகழ்ந்துள்ளார்.

கோலியின் கைவந்த கலை
உலக அளவில் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொள்வது எளிதான செயலல்ல என்றும், அதற்கு முழு உழைப்பை தொடர்ந்து செலுத்த வேண்டியது அவசியம் என்றும் ஷிவ்நரைன் சந்தர்பால் கூறியுள்ளார். தன்னுடைய பிட்னஸ் மற்றும் திறனுக்காக மெனக்கெடும் விராட் கோலிக்கு அவருடைய முதலிடமே அவரது திறமைக்கு சான்றாக விளங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாரையும் எளிதாக நினைக்க வேண்டாம்
ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறவுள்ள டி20 உலக கோப்பை தொடரில் விளையாட சிறப்பான வீரர்களை மேற்கிந்திய தீவுகள் வைத்துள்ளதாகவும், ஆனால், டி20 உலக கோப்பையை பொருத்தவரை வெற்றியை கணிக்க முடியாது என்றும், அது அந்த நாளின்போது விளையாடப்படும் ஆட்டத்திற்கான வெற்றியாகவே அமையும் என்றும் அவர் கூறியுள்ளார். யாரையும் எளிதாக நினைக்காமல் கடினமாக விளையாடினால் மேற்கிந்திய தீவுகளுக்கு வெற்றி சாத்தியப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications