ஸ்ரேயாஸ், பும்ரா உள்பட 8 வீரர்கள் வெஸ்ட் இண்டீஸ் ODI தொடரில் ஆட மாட்டார்கள்.. பின்னணி என்ன?
மும்பை: 2027 ஒருநாள் போட்டி உலகக் கோப்பைத் தொடருக்கு இந்திய அணி தயாராகி வரும் நிலையில், வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர், ஜஸ்பிரித் பும்ரா உட்பட 8 முக்கிய வீரர்கள் இடம் பெற மாட்டார்கள் என தெரிய வந்துள்ளது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் ஒருநாள் தொடர் செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 3 வரை நடைபெறுகிறது. ஆனால், அதே காலகட்டத்தில் செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 1 வரை ஜப்பானில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன.

இதனால் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள முக்கிய வீரர்கள், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டிக்காக பிசிசிஐ ஏற்கனவே அறிவித்துள்ள அணியில் ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், அக்சர் படேல், நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷித் ராணா, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகிய 8 முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் எட்டு பேரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட மாட்டார்கள்.
இவர்கள் அனைவரும் ஆசிய விளையாட்டு போட்டிகளுக்காக ஜப்பான் செல்ல உள்ளதால், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்குப் புதிய வீரர்கள் அடங்கிய மாற்று இந்திய அணியைப் பிசிசிஐ தேர்வு செய்யவுள்ளது. அந்த அணியில் கேப்டன் சுப்மன் கில், விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் நிச்சயம் இடம் பெறுவார்கள். அதே சமயம் இளம் வீரர்கள் பலருக்கும் அணியில் இடம் கிடைக்கும்.
அதே சமயம், ஒரே நேரத்தில் இரு வேறு தொடர்களில் இந்திய அணி களம் இறங்குவது ரசிகர்களிடையே சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும் விஷயமாக உள்ளது. இளம் வீரர்கள் பலருக்கும் இதனால் வாய்ப்பு கிடைக்கும்.
2026 ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய அணி:
ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், சிவம் துபே, திலக் வர்மா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார் ரெட்டி, வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், வைபவ் சூர்யவன்ஷி, ஜஸ்பிரித் பும்ரா.


Click it and Unblock the Notifications
