மும்பை: சச்சின் டெண்டுல்கரின் மகளான சாராவை காதலிப்பதாக வதந்திகள் பரவி வருவது குறித்து இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர் சுப்மன் கில் பதில் அளித்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர் சுப்மன் கில். நல்ல உயரம், சரியான ஸ்டான்ஸ், ஸ்பின்னர்களை எளிதாக கையாளும் திறமை, பவுன்சர் பந்துகளை புல் ஷாட் மூலம் விளாசுவது என்று சிறிய வயதிலேயே ஏராளமான திறமையுடன் வலம் வந்து கொண்டிருக்கிறார். அதேபோல் இந்திய அணிக்காக அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடி வரும் வீரராகவும் கில் உருவெடுத்துள்ளார்.

இதனால் சுப்மன் கில்லை எதிர்கால கேப்டனாக ரேஸில் பிசிசிஐ கொண்டு வந்திருக்கிறது. அதேபோல் விராட் கோலிக்கு பின் சர்வதேச கிரிக்கெட்டை ஆளப்போகும் வீரராகவும் சுப்மன் கில் உருவெடுத்து வருவதாக முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் சுப்மன் கில் ஆட்டம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது.
இதுவொரு பக்கம் இருக்க, சுப்மன் கில் பற்றிய வதந்திகளும் மீண்டும் அதிகரித்து வருகின்றன. சுப்மன் கில் இந்திய அணிக்கு விளையாட தொடங்கியதில் இருந்தே, சச்சின் டெண்டுல்கரின் மகளான சாராவை காதலிப்பதாக வதந்திகள் பரவின. அதற்கேற்ப ஹர்திக் பாண்டியாவும் ஒருமுறை சுப்மன் கில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கமெண்ட் செய்து வதந்தியை உறுதிபடுத்தினார்.
அதேபோல் காதலர் தினத்தன்று மும்பையின் பிரபல உணவகத்தில் சுப்மன் கில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அதே போன்ற புகைப்படத்தை சாரா டெண்டுல்கரும் சில மாதங்களுக்கு முன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். இதனால் இவர்கள் பற்றிய சந்தேகங்கள் ஓய்ந்தபாடில்லை.
இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவரான சுப்மன் கில், பஞ்சாப் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அந்த பேட்டியில் தொகுப்பாளர், நீங்கள் சாராவை டேட் செய்கிறீர்களா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு சுப்மன் கில், இருக்கலாம் (maybe) என்று பதிலளித்துள்ளார். இதனால் ரசிகர்கள் சாரா - சுப்மன் கில் காதலிப்பது உண்மை தான் போல என கருத்து தெரிவித்து வருகின்றனர்.