“இந்தியா தோல்விக்கு காரணமே இவங்க தான்”.. சக வீரர்கள் மீதே பழியைப் போட்ட கேப்டன் சுப்மன் கில்
லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து, ஒருநாள் தொடரையும் 2-1 என பறிகொடுத்தது. இந்தத் தோல்விக்கு இந்திய பந்துவீச்சாளர்களின் மோசமான செயல்பாடே முக்கியக் காரணம் என்று இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் வெளிப்படையாக குற்றம் சாட்டியுள்ளார்.
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 387 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய இந்தியா 360 ரன்கள் மட்டுமே எடுத்தது. போட்டிக்கு பின் பேசிய சுப்மன் கில், "இங்கிலாந்து இன்னிங்ஸின் 45வது ஓவர் வரை நாங்கள் ஆட்டத்தில் தான் இருந்தோம். ஆனால் கடைசி கட்ட ஓவர்களில், குறிப்பாக கடைசி 3 ஓவர்களில் எங்கள் பந்துவீச்சாளர்கள் அதிக ரன்களை விட்டுக் கொடுத்தனர். அங்கு தான் போட்டி எங்களை விட்டு கைநழுவிச் சென்றது.

முதல் பவர்பிளேயிலும் நாங்கள் சரியாக பந்துவீசவில்லை. இங்கிலாந்து வீரர்கள் அதை நன்றாக பயன்படுத்தி ரன்களை குவித்தனர். இதனால் மீண்டும் ஆட்டத்திற்குள் வர எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை" என்று தெரிவித்தார்.
உண்மையில் இந்தப் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஆறாவது பந்துவீச்சாளரே இல்லை. நீண்ட பேட்டிங் வரிசை தேவை என ஆல் ரவுண்டர் அக்சர் பட்டேலையும் சேர்த்து சரியாக 5 பந்துவீச்சாளர்கள் மட்டுமே இந்திய அணியில் இடம் பெற்று இருந்தனர். அதைப் பயன்படுத்தி இங்கிலாந்து அணி யார் பந்துவீச்சில் கவனமாக ஆட வேண்டும், யார் பந்துவீச்சில் அதிக ரன் குவிக்க வேண்டும் என திட்டமிட்டு ஆடி 387 ரன் குவித்தது.
அணித் தேர்வில் செய்த தவறை மறைத்து விட்டு சக வீரர்களான பந்துவீச்சாளர்களை மட்டுமே குற்றம் சுமத்தி இருக்கிறார் கேப்டன் சுப்மன் கில். பந்துவீச்சை குறை சொன்ன கில் 388 ரன்கள் என்ற இலக்கை எட்டுவது பற்றிய இந்திய அணியின் சேஸிங் திட்டம் ஏன் சொதப்பியது என்பது பற்றியும் கூறினார்.
"40 ஓவர்களுக்குப் பிறகு விக்கெட்டுகள் கையில் இருந்தால் வெற்றி பெறலாம் என்று நினைத்தோம். பவர்பிளேக்கு பின் ஓவருக்கு 6 முதல் 6.5 ரன்கள் வீதம் சேர்த்து, கடைசி 10 ஓவர்களில் ஓவருக்கு 10 ரன்கள் அடிக்க திட்டமிட்டோம். பிட்ச் மெதுவாக மாறிய போதிலும் ரோஹித் சர்மா அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் பேட்டிங் செய்த விதம் பார்க்கவே அற்புதமாக இருந்தது" என்றார் கில்.
தங்கள் அணியின் வெற்றி குறித்து பேசிய இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக், "உலகின் முதல் நிலை அணியான இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது மிகுந்த பெருமையளிக்கிறது. பென் டக்கெட், ஜேக்கப் பெத்தேல் மற்றும் ஜோ ரூட் ஆகியோரின் சிறப்பான கூட்டணியே இந்த வெற்றிக்கு காரணம்" என்று பாராட்டினார்.


Click it and Unblock the Notifications

