ஆஸி.க்கு எதிராக சுப்மன் கில் அபார சதம்.. பவுலர்களை தாலாட்டு பாடி தூங்க வைத்த புஜாரா
அகமதாபாத் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் சதம் விளாசினார்.
பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் ஆஸ்திரேலிய அணி அபாரமாக விளையாடி 480 ரன்களை குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து 3வது நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணி வீரர்கள் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். குறிப்பாக ஸ்டார்க் பந்தில் ரோகித் சர்மா அடித்த ஷாட் பால் சிக்சருக்கு பறந்தது.

பொறுப்பான ஆட்டம்
எனினும் கவனக்குறைவான ஷாட் ஆடி கேப்டன் ரோகித் சர்மா 35 ரன்களில் வெளியேறினார். அதுவரை அதிரடியாக விளையாடிய சுப்மன் கில், அதன் பிறகு அவருடைய ரன்குவிக்கும் வேகத்தை குறைத்து கொண்டார். சுப்மன் கில் 90 பந்துகளில் அரைசதம் கடந்தார். 3வது நாள் முதல் பகுதியில் இந்தியா 93 ரன்கள் சேர்த்து ஒரு விக்கெட் மட்டுமே இழந்தது.

ஆமை வேகம்
அதன் பிறகு ஆஸ்திரேலிய வீரர்கள் தங்களது யுத்தியை மாற்றினார்கள். இந்திய வீரர்கள் எங்கு எல்லாம் ஷாட் ஆடி ரன்கள் சேர்ப்பார்களோ, அங்கு ஃபில்டர்களை நிறுத்திவிட்டு ரன்களை கட்டுப்படுத்தினர். இதன் மூலம் ரன்கள் வருவது வறண்டு போய்விட்டது. இதனால் சிங்கிள்ஸ் எடுத்து ரன் சேர்க்க இந்திய வீரர்கள் தடுமாறினர்.

96 பந்துகளுக்கு பிறகு
குறிப்பாக புஜாரா, வழக்கம் போல் ஆமை வேகத்தில் ரன்கள் சேர்க்க, ஆஸ்திரேலிய பவுலர்களுக்கு தாலாட்டு பாடி தூங்க வைத்தார். மறுபுறம் சுப்மன் கில் தனது விக்கெட்டை இழக்காமல் பெறுமை காத்தார். சுமார் 96 பந்துகளுக்கு பிறகு இந்திய அணி பவுண்டரி அடித்தது. சுப்மன் கில் தொடர்ந்து பவுண்டரி அடித்து திடீரென்று ஸ்கோரை உயர்த்தினார்.

சுப்மன் கில் சதம்
இதனையடுத்து சுப்ன் கில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய 2வது சதத்தை பூர்த்தி செய்தார். இதனை விராட் கோலி உள்ளிட்ட வீரர்கள் கை தட்டி பாராட்டினர். கேஎல் ராகுல் தொடக்க வீரராக சொதப்பிய நிலையில், சுப்மன் கில் சதம் அடித்து தன்னுடைய இடத்தை உறுதி செய்தார். மறுபுறும் புஜாரா 42 ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணி 187 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்தது. ஆஸ்திரேலிய ஸ்கோரை விட இந்திய அணி 293 ரன்கள் பின்தங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications