இலங்கைக்கு எதிராக சதம் விளாசிய சுப்மான் கில்.. ஒருநாள் கிரிக்கெட்டில் அபார ரெக்காட்ஸ்.. முழு விவரம்
திருவனந்தபுரம் : இலங்கைக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் சுப்மான் கில் சதம் விளாசி அசத்தினார். இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பு , 2022ஆம் ஆண்டு தொடக்க வீரராக அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
ஆனால், இஷான் கிஷன் இரட்டை சதம் விளாசி சுப்மான் கில் செய்ததை அனைத்தையும் மறக்கடித்துவிட்டார். இதனால் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் சுப்மான் கில்லுக்கு வாய்ப்பு வழங்கப்பட்ட போது ரசிகர்கள் கடும் விமர்சனத்தை வைத்தனர்.
இதனால் தன்னுடைய திறமையை நிரூபித்து மீண்டும் தொடக்க வீரர் இடத்திற்கு நான் தான் என்று நிரூபிக்க வேண்டிய பொறுப்பில் சுப்மான் கில் இருந்தார்.

அரைசதம்
இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 70 ரன்கள் அடித்த சுப்மான் கில், 2வது ஒருநாள் போட்டியில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த நிலையில், இன்றைய ஆட்டத்தில் சுப்மான் கில் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். 8 பவுண்டரிகளை விளாசிய சுப்மான் கில் 52 பந்துகளில் அரைசதம் கடந்தார்.

அதிரடி ஆட்டம்
அதோடு தனது ஆட்டத்தை நிறுத்தி கொள்ளாமல் சுப்மான் கில் அதிரடியை காட்டினார். ரோகித் சர்மா ஆட்டமிழந்தாலும், விரட் கோலியுடன் இணைந்து சுப்மான் கில் தனது இன்னிங்சை கட்டமைத்தார். இதனால் கண் இமைப்பதற்குள் சுப்மான் கில் 90 ரன்களை கடந்தார்.

2வது சதம்
இதனையடுத்து 89 பந்துகளில் சுப்மான் கில், சதத்தை கடந்தார். இதில் 11 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும். இது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் கில்லுடைய 2வது சதமாகும். இதனையடுத்து, சுப்மான் கில் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். இதனையடுத்து 97 பந்துகளில் 116 ரன்கள் எடுத்த நிலையில், போல்ட் ஆனார்.

உறுதி செய்தார்
இதன் மூலம் கடந்த 2022ஆம் ஆண்டு முதல் சுப்மான் கில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 15 இன்னிங்ஸ் விளையாடி இருக்கிறார். இதில் 5 முறை அரைசதமும், 2 முறை சதமும் சுப்மான் கில் அடித்து, தொடக்க வீரராக தனது திறமையை நிரூத்து இருக்கிறார். இந்த பார்மை தொடர்ந்து அவர் வெளிப்படுத்தினாலே உலககோப்பையில் தனது இடத்தை அவர் உறுதி செய்துவிடுவார்.


Click it and Unblock the Notifications