
அடையாளமான ஐபிஎல் போட்டிகள்
இந்தியாவின் இளம் வீரர்களுக்கு ஒரு அறிமுகமாக துவங்கப்பட்டதுதான் ஐபிஎல் போட்டிகள். ஆனால் தற்போது இந்தியாவின் குறிப்பாக இந்திய கிரிக்கெட்டின் அடையாளமாக மாறியுள்ளது ஐபிஎல். உலக அளவில் நடத்தப்பட்டுவரும் லீக் போட்டிகளுக்கு முன்னோடியாக மட்டுமின்றி சர்வதேச அளவில் வீரர்கள் அனைவரும் பங்கேற்க ஆர்வம் காட்டிவரும் தொடராக ஐபிஎல் மாறியுள்ளது.

ஐபிஎல் ஏலம் 2021
இந்நிலையில் தற்போதைய ஐபிஎல் 2021 சீசனுக்கான ஏலம் நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்று முடிந்துள்ளது. வழக்கம்போல இதில் ஆச்சர்ய அணிவகுப்புகள் அதிகமாகவே காணப்பட்டது. அதிகமாக விலைபோகும் வாய்ப்புள்ள வீரர்கள் குறைவாகவும், குறைவான வாய்ப்புள்ள வீரர்கள் அதிகமான விலைக்கு ஏலம் போனதும் நேற்றைய தினம் நடைபெற்றது.

கிறிஸ் மோரீஸ் சிறப்பு
கடந்த ஐபிஎல்லில் 10 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு ஆர்சிபி அணிக்காக விளையாடிய கிறிஸ் மோரீஸ், தனது சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். ஆயினும் அவரை இந்த சீசனில் ரிலீஸ் செய்தது ஆர்சிபி. இந்நிலையில் அவர் இந்த சீசனில் அதிகபட்ச தொகைக்கு அதாவது 16.25 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் விலைக்கு வாங்கப்பட்டுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அதிக தொகைக்கு ஏலம்
இதேபோல கடந்த சீசனில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய க்ளென் மாக்ஸ்வெல், ஒரு சிக்ஸ் கூட அடிக்கவில்லை. அவரால் சிறப்பாக விளையாட முடியவில்லை என்பதை அவரே ஒப்புக் கொண்டார். இந்நிலையில் நேற்றைய ஏலத்தில் அவரை ஆர்சிபி அணி 14.25 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்து அதிர்ச்சி அளித்துள்ளது.

ஸ்மித் ரூ.2.20 கோடிக்கு ஏலம்
இந்த ஏலத்தையொட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை விடுவித்தது. அவரது ஆதார விலை 2 கோடி ரூபாயாக உள்ள நிலையில் அவர் 2.20 கோடி ரூபாய்க்கு இந்த ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். இவர் சிறப்பாக ஏலம் போவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. கடந்த சீசனில் அவர் சரியாக விளையாடாத நிலையில், டெல்லி கேபிடல்ஸ் அணி அவரை தற்போது ஏலத்தில் எடுத்துள்ளது.

சிஎஸ்கே ஏலம்
டெஸ்ட் கிங் கடந்த சீசன்களில் ஐபிஎல்லில் பங்கேற்கவில்லை. இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகளுக்காக அவர் பதிவு செய்திருந்த நிலையில் அவரை சிஎஸ்கே 50 லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளது. கடந்த ஆஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் இவர் சிறப்பாக செய்லபட்டது குறிப்பிடத்தக்கது.

ஆச்சர்ய ஏலம்
ஆர்சிபி அணியால் விடுவிக்கப்பட்ட வீரர்கள் சிவம் தூபே மற்றும் உமேஷ் யாதவ், இவர்களை வாங்க சில அணிகள் ஆர்வம் காட்டவே செய்தன. தன்னுடைய ஆல்-ரவுண்ட் திறனுக்காக தூபே சிறப்பாக விலை கேட்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரை 4.4 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. அனுபவம் மிக்கவராக பார்க்கப்படும் உமேஷ் யாதவ் வெறும் ஒரு கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











