மும்பை: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற போதும் ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் கடைசியாக விளையாடுவதற்கு சவுரவ் கங்குலியே காரணம் என்று இந்திய முன்னாள் வீரர் விருத்திமான் சாஹா தெரிவித்துள்ளார். சவுரவ் கங்குலியும், எனது மனைவியும் கேட்டுக் கொண்டதாலேயே பெங்கால் அணிக்காக ரஞ்சி டிராபியில் விளையாட ஒப்புக் கொண்டேன் என்று கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 17 சீசன்கள் விளையாடியுள்ள விருத்திமான் சாஹா, திடீரென இந்த ரஞ்சி டிராபி சீசனுடன் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்திய அணிக்காக 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், கடைசியாக 2021ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார்.

2014ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு பெற்ற பின் அவரது இடத்தை நிரப்ப கொண்டு வரப்பட்டவர் சாஹா. உள்நாட்டில் சிறப்பாக ஆடிய சாஹா, ரிஷப் பண்ட் எழுச்சி மற்றும் வயது காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக ஓரம் கட்டப்பட்டார். தற்போது 40 வயதை எட்டியுள்ள நிலையில், ஐபிஎல் தொடரில் விளையாட சாஹா பதிவு கூட செய்யவில்லை.
இதன் மூலமாக ரஞ்சி டிராபி சீசனுடன் சாஹா ஓய்வு பெறுவது உறுதியாகியுள்ளது. இருந்தாலும் ரசிகர்கள் பலரும் எதற்காக ரஞ்சி டிராபி தொடருடன் சாஹா ஓய்வு பெறும் முடிவுக்கு வந்தார் என்ற கேள்வியுடன் இருந்தனர். இதுகுறித்து விருத்திமான் சாஹா பேசுகையில், இந்த ஆண்டு ரஞ்சி டிராபி சீசனில் விளையாடும் திட்டத்திலேயே நான் இருக்கவில்லை.
ஆனால் சவுரவ் கங்குலி மற்றும் எனது மனைவி இருவரும் இந்த சீசனில் பெங்கால் அணிக்காக விளையாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். ரஞ்சி டிராபியை பொறுத்தவரை எனது முதல் 2 ஆண்டு கால பயணம் திரிபுரா அணியுடன் தான் இருந்தது. அதன்பின் பெங்கால் அணிக்காக விளையாட தொடங்கினேன்.
இந்த சீசனில் காயம் மற்றும் உடல்நிலையை கருத்தி கொண்டு, அனைத்து போட்டிகளிலும் விளையாட வேண்டாம் என்று முடிவு எடுத்துள்ளேன். ஏனென்றால் டெஸ்ட் கிரிக்கெட் எப்போதும் கடினமானது. இந்த வயதில் விளையாடுவது கடினம் என்றாலும், நிச்சயம் கடைசியாக ஒருமுறை விளையாட தயாராக இருக்கிறேன். இந்த சீசனில் விளையாட வேண்டாம் என்று முடிவு செய்திருந்தாலும், பயிற்சியை கைவிடவில்லை.
அதனால் திடீரென பெங்கால் அணிக்காக விளையாடுவதில் எனக்கு எந்த சிக்கலும் இருக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் ஓய்வு முடிவை ஓராண்டுக்கு முன்பாகவே எடுத்துவிட்டேன். ஆனால் கங்குலி மற்றும் எனது மனைவி கேட்கும் போது, என்னால் முடியாது என்று மறுக்க முடியவில்லை. அவர்களுக்காக தான் ரஞ்சி டிராபி சீசனில் பெங்கால் அணிக்காக விளையாட ஒப்புக் கொண்டேன். இதனால் கூடுதல் எமோஷனலாக உள்ளது என்று கூறியுள்ளார்.