
அணியில் சச்சின் - கங்குலி
சச்சின் டெண்டுல்கர், சௌரவ் கங்குலி இருவரும் பால்ய காலத்தில் இருந்தே கிரிக்கெட் பயிற்சிகளில் சந்தித்துக் கொண்டவர்கள். அதன் பின் சச்சின் 16 வயதில் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆனார். அடுத்த சில ஆண்டுகளில் கங்குலியும் இந்திய அணியின் இணைந்தார்.

மிடில் ஆர்டர் வீரர்கள்
இருவரும் ஒருநாள் போட்டிகளில் அதிரடி துவக்க வீரர்களாகவும், டெஸ்ட் போட்டிகளில் மிடில் ஆர்டர் வீரர்களாகவும் ஆடி வந்தனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் மிடில் ஆர்டரில் இருவருமே தங்களை பல போட்டிகளில் நிரூபித்துள்ளனர். ஆனால், அவர்கள் அதிக போட்டிகளில் துவக்க வீரர்களாக இறங்கியதில்லை.

சச்சின் டெண்டுல்கர் அளித்த வாய்ப்பு
1997 இலங்கை அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரில் அப்போதைய கேப்டன் சச்சின் டெண்டுல்கர் கங்குலிக்கு துவக்கம் அளிக்க வாய்ப்பு அளித்தார். அப்போது கங்குலி உச்சகட்ட பார்மில் இருந்ததால் அந்த வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால், கங்குலி அதில் சொதப்பினார்.

துவக்க வீரர்கள் பிரச்சனை
அந்த டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி மும்பையில் நடைபெற்றது. இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. அப்போது டெஸ்ட் அணிக்கு சரியான துவக்க வீரர்கள் அமையவில்லை. அனுபவம் கொண்ட நவ்ஜோத் சிங் சித்துவுடன், நயன் மோங்கியா துவக்கம் அளித்து வந்தார்.

மும்மூர்த்திகள் அதிரடி
முதல் இன்னிங்க்ஸில் நயன் மோங்கியா 1, சித்து 35 ரன்கள் மட்டுமே எடுத்தனர். எனினும், அடுத்த வந்த மும்மூர்த்திகள் ராகுல் டிராவிட் 93, சௌரவ் கங்குலி 173, சச்சின் டெண்டுல்கர் 148 ரன்கள் குவித்தனர். அசாருதீன் டக் அவுட் ஆனார். இந்தியா முதல் இன்னிங்க்ஸில் 512 ரன்கள் குவித்தது.

படுநிதான ஆட்டம்
அடுத்து ஆடிய இலங்கை அணி 361 ரன்கள் எடுத்தது. இரண்டு அணிகளும் தங்கள் முதல் இன்னிங்க்ஸில் நிதான ஆட்டம் ஆடி இருந்தன. அதிலும் இலங்கை அணி ஓவருக்கு 2.5 ரன்கள் விகிதம் ரன் சேர்த்து ஓவர்களை வீணடித்து இருந்தது.

சச்சின் திட்டம்
இந்தியா இரண்டாவது இன்னிங்க்ஸில் அதிரடி ஆட்டம் ஆடி நான்காம் நாளில் 200 ரன்கள் வரை குவித்தால், இலங்கை அணிக்கு 352 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்து ஐந்தாம் நாள் வெற்றி பெற முயற்சி செய்யலாம் என திட்டமிட்டார் கேப்டன் சச்சின்.

கங்குலி துவக்கம்
எனவே, நவ்ஜோத் சிங் சித்துவுடன், முதல் இன்னிங்க்ஸில் சதம் அடித்து இருந்த சௌரவ் கங்குலியை துவக்க வீரராக களமிறக்கினார் சச்சின். ஆனால், கங்குலி 11 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறி ஏமாற்றம் அளித்தார். பின்னர், சித்து 43, டிராவிட் 85 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொதப்பினர்.

போட்டி முடிவு என்ன?
இந்தியா இரண்டாம் இன்னிங்க்ஸில் 181 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. பின் இலங்கை அணி இரண்டாம் இன்னிங்க்ஸில் கடும் "டொக்கு" வைத்து போட்டியை டிரா செய்தது. இந்தப் போட்டியின் இரண்டாம் இன்னிங்க்ஸில் துவக்கம் அளித்தது தான் கங்குலியின் முதலும், கடைசியுமான டெஸ்ட் ஓபனிங்.

ஒரே ஒரு இன்னிங்க்ஸ்
கங்குலி டெஸ்ட் போட்டிகளில் 188 இன்னிங்க்ஸ்களில் 99 முறை ஐந்தாம் இடத்திலும், 47 முறை ஆறாம் இடத்திலும் பேட்டிங் செய்துள்ளார். நான்காம் வரிசையில் 20 முறை பேட்டிங் செய்துள்ளார். ஆனால், ஒரே ஒரு இன்னிங்க்ஸில் மட்டுமே துவக்கம் அளித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











