"அவசர பயணம்".. இரவே மும்பைக்கு வரும் கங்குலி.. "ஒரே கல்லில் இரண்டு மாங்கா" - செம பிளான்
மும்பை: நாளை (மே.29) நடக்கவுள்ள பிசிசிஐ-யின் எஸ்ஜிஎம் மீட்டிங்கில் இரண்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. அவை என்னவென்று பார்ப்போம்.
ஐபிஎல் போட்டிகள் மீண்டும் செப்.19 அல்லது செப்டம்பர் 20ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கும் என்றும், அக்டோபர் 10ம் தேதி இறுதிப் போட்டி நடைபெறும் என்றும் ஸ்போர்ட்ஸ் டுடே சமீபத்தில் செய்தி வெளியிட்டது.
இந்த 31 போட்டிகளில், 10 போட்டிகள் double headers-ஆக, அதாவது ஒரே நாளில் இரண்டு போட்டிகளாக நடத்தப்படும் என்றும், 7 போட்டிகள் single headers-ஆகவும், 4 பிளே-ஆஃப் போட்டிகள் என 31 போட்டிகளும் 21 நாளில் நடத்தி முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஸ்போர்ட்ஸ் டுடே
இத்தகவலை ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களும், தலைமை செயல் அதிகாரிகளும் உறுதிப்படுத்தி உள்ளதாகவும், பிசிசிஐ அதிகாரிகள் அதிகாரப்பூர்வமற்ற முறையில் தெரிவித்ததாகவும் விளையாட்டு பத்திரிகையாளர் போரியா மஜூம்தார் ஸ்போர்ட்ஸ் டுடே யூடியூப் நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

SGM மீட்டிங்
அதன் பிறகு, ஏபிபி வெளியிட்ட செய்தியில், "மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள், இங்கிலாந்து - இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முடிவில், செப்டம்பர் 18 அல்லது 19 முதல் ஷார்ஜா, அபுதாபி மற்றும் துபாயில் நடைபெறும்" என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மே.29 பிசிசிஐ சார்பில் நடத்தப்படும் SGM மீட்டிங் முடிவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஐசிசி மீட்டிங்
உலகக் கோப்பை முடிவு செய்ய, வரும் ஜூன் 1ம் தேதி ஐசிசி தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது. இந்த நிலையில், அதற்கு முன்பாகவே.. அதாவது மே 29ம் தேதி, SGM எனப்படும் 'சிறப்பு பொதுக்குழு கூட்டத்தை' பிசிசிஐ கூட்டியுள்ளது. இதில், உலகக் கோப்பையை நடத்துவது குறித்தும், ஐபிஎல் தேதிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. இறுதியில், ஐபிஎல் ரீ ஸ்டார்ட் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிசிசிஐ வெளியிட உள்ளதாகவும் ஏபிபி செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் அனைத்தும் ஜூன் 1 அன்று நடக்கும் ஐசிசி மீட்டிங்கின் போது, பிசிசிஐ அதிகாரிகள் தெரிவிக்க உள்ளனர்.

இன்றிரவு லேண்டிங்
இந்த சூழலில், எஸ்ஜிஎம் மீட்டிங்கில் கலந்து கொள்ள, பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி இன்றிரவு மும்பை வரவிருக்கிறார். இதுகுறித்து பிசிசிஐ தரப்பில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், "இந்த ஆலோசனை கூட்டம் வீடியோ கான்ஃபிரன்ஸாக நடக்கும் என்றாலும், மீட்டிங்கில் கலந்து கொள்ளும் அனைவரும் ஒரே இடத்தில் குழும முடிவு செய்துள்ளோம், அந்த இடம் மும்பை. ஆகையால், இன்றிரவு கங்குலி மும்பை வருகிறார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு முடிவுகள்
மேலும், செப் 15 முதல் அக்டோபர் 15 வரை ஐபிஎல் போட்டிகளை நடத்தலாம் என்ற ஆலோசனையும் நடத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஐபிஎல் விளையாடுவதால், வீரர்களுக்கு உலகக் கோப்பை டி20 தொடரில் விளையாடுவதற்கு நல்ல ஒரு பயிற்சியாக இருக்கும். ஐபிஎல் தொடரை முடித்ததாகவும் ஆச்சு.. டி20 உலகக் கோப்பைக்கு பயிற்சியும் ஆச்சு.. இதுகுறித்த அனைத்து இறுதி முடிவுகளும் கங்குலி தலைமையில் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications