ரூ.48,000 கோடிக்கு என்ன செலவு??.. பிசிசிஐ போட்டுள்ள மெகா திட்டம்.. உண்மையை உடைத்த சவுரவ் கங்குலி!
மும்பை: சுமார் ரூ. 48,000 கோடி வருமானத்தை வைத்துக்கொண்டு பிசிசிஐ என்ன செய்யப்போகிறது என சவுரவ் கங்குலி விளக்கியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 2023 முதல் 2027ம் ஆண்டு வரையிலான ஒளிபரப்பு உரிமை சமீபத்தில் ஏலமிடப்பட்டது.
பல முன்னணி நிறுவனங்கள் பங்குபெற்ற இந்த ஏலத்தின் மூலம், ஐபிஎல் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

ஐபிஎல் ஏலம்
மொத்தம் 4 பிரிவுகளாக விடப்பட்ட இந்த ஒளிபரப்பு உரிமைக்கான ஏலத்தில் டிஸ்னி ஸ்டார் நிறுவனம், ரிலையன்ஸ் வியாகாம், டைம்ஸ் இண்டர்நெட் ஆகிய நிறுவனங்கள் வெற்றி பெற்றுள்ளன. மொத்தமாக அடுத்த 5 ஆண்டுகளுக்கான உரிமம் ரூ.48,390 கோடிக்கு ஏலம் போயுள்ளது. சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் எந்தவொரு தொடரும் இந்த உச்சத்தை எட்டியதில்லை.

லாபம் எவ்வளவு
கடந்த 5 ஆண்டுகளுக்கான உரிமம் ரூ.16,347 கோடிக்கு ஏலம் போயிருந்தது. தற்போது 2 மடங்களுக்கு மேல் உயர்ந்து பல்லாயிரம் கோடிகளை பிசிசிஐ லாபம் பார்க்கவுள்ளது. இதனால் இவ்வளவு பணத்தை வைத்து என்ன செய்யப்போகிறார்கள் என்பது தான் ரசிகர்களின் அடுத்த கேள்வியாக உள்ளது.

சவுரவ் கங்குலி பதில்
இந்நிலையில் அதற்கு பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியே பதில் கொடுத்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், அந்த பணத்தை வைத்து நாடு முழுவதும் உள்ள மைதானத்தை மேம்படுத்தி, ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கவுள்ளோம். நாடு முழுவதும் நிறைய புது மைதானங்கள் கட்டப்படவுள்ளன. மேலும் சில மைதானங்கள் புதுப்பிக்கப்படவும் உள்ளன. புதிய வசதிகள் கொண்டு வரப்படவுள்ளது என தெரிவித்துள்ளார்.

மைதான விவரங்கள்
ஜெய்பூரில் தற்போது புதிய மைதானம் கட்டப்பட்டு வருகிறது. மேலும் சில மைதானங்களுக்கு திட்டம் முடிக்கப்பட்டுள்ளன. பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமி மிகவும் பழைய வசதிகளுடன் உள்ளது. எனவே பெங்களூரு விமான நிலையத்திற்கு அருகே தேவனஹல்லி பகுதியில் புதிய அகாடமியை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கொல்கத்தாவில் புதிய மைதானம்
இது ஒருபுறம் இருக்க மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஏற்கனவே புகழ்பெற்ற ஈடன் கார்டன் மைதானம் உள்ளது. எனினும் அங்கு புதிய மைதானம் ஒன்றை கட்டவும் பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதற்காக அம்மாநில முதல்வர் மமதா பேனர்ஜியுடன் கங்குலி நேரில் சந்தித்து மைதானத்திற்கான இடம் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.


Click it and Unblock the Notifications