கவுகாத்தி: இந்திய கிரிக்கெட் அணி தனது சொந்த மண்ணில் இதுவரை கண்டிராத ஒரு வரலாற்றுச் சரிவைச் சந்தித்துள்ளது. கவுகாத்தி டெஸ்ட் போட்டியில் இந்தியாவை 408 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய தென்னாப்பிரிக்கா, 2 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றி 'ஒயிட்வாஷ்' செய்துள்ளது.
இதன் மூலம், இந்திய கிரிக்கெட் வரலாற்றில், சொந்த மண்ணில் இரண்டு முறை ஒயிட்வாஷ் செய்த முதல் மற்றும் ஒரே அணி என்ற உலக சாதனையை தென்னாப்பிரிக்கா படைத்துள்ளது.

டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி, இந்தத் தொடர் முழுவதும் பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் என அனைத்திலும் இந்தியாவை விட பல மடங்கு சிறப்பாகச் செயல்பட்டது. கவுகாத்தியில் முடிவடைந்த இரண்டாவது டெஸ்டில், 549 ரன்கள் என்ற இமாலய இலக்கைத் துரத்திய இந்திய அணி, 5-ம் நாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கப் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 140 ரன்களுக்குச் சுருண்டது. இதன் மூலம் 408 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பெற்றது தென்னாப்பிரிக்கா.
தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவை அதன் சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் செய்வது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன், 2000-ம் ஆண்டில் சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்திய அணியை, ஹான்சி குரோனியே தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி ஒயிட்வாஷ் செய்திருந்தது.
தற்போது 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே சாதனையை நிகழ்த்தி, இந்தியாவை அதன் சொந்த மண்ணில் இரண்டு முறை முழுமையாகத் தொடரைக் கைப்பற்றிய ஒரே அணி என்ற உலக சாதனையை தென்னாப்பிரிக்கா தன்வசப்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் போன்ற ஜாம்பவான் அணிகளால் கூட செய்ய முடியாத சாதனையை தென்னாப்பிரிக்கா செய்து காட்டியுள்ளது.
IND vs SA: இந்திய அணியின் தோல்விக்கு காரணமே இதுதான்.. மனக் குமுறலை கொட்டிய கேப்டன் ரிஷப் பண்ட்
இந்த வரலாற்றுத் தோல்வி, இந்திய அணிக்கு மிகப்பெரிய தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது. பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மீது கடுமையான விமர்சனங்கள் எழத் தொடங்கியுள்ளன. இந்திய டெஸ்ட் அணியின் எதிர்காலம் குறித்து பிசிசிஐ தீவிரமாக ஆலோசிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.