மும்பை: கடந்த 30 ஆண்டுகளில் இருந்து மிகச்சிறந்த வீரர்களை கொண்டு ஒரு டெஸ்ட் அணியை உருவாக்கினால், அதில் தென்னாப்பிரிக்கா அணிக்காக ஆடிய டேல் ஸ்டெய்னின் பெயர் நிச்சயம் இடம்பெறும். பந்துவீசுவதற்காக ஓடி வரும் 14 அடிகளை மூன்று வகையாக பிரித்திருப்பார் டேல் ஸ்டெய்ன். முதல் 4 அடிகளில் இடது கையில் பந்து இருக்கும், அடுத்த 4 அடிகளில் வலது கைகளுக்குள் செல்லும் பந்து, கடைசி 6 அடிகளில் தோளை தொட்டு வீசப்படும் போது கண் சிமிட்டும் நொடியில் போல்ட்டை தெறிவிட்டிருக்கும்.
தென்னாப்பிரிக்காவுக்காக அறிமுகமான முதல் 3 ஆண்டுகளில் நிரந்தர இடம் கிடைக்கவில்லை. ஆனால் ஜாம்பவான்கள் வீரர்கள் ஓய்வுபெற்ற பின் கிடைத்த வாய்ப்பில், சில மாதங்களிலேயே துல்லியத்தின் உச்சத்தை தொட்டிருந்தார் டேல் ஸ்டெய்ன். ஒரேயொரு ஸ்பெல்லில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட மைதானங்களில் ஆட்டத்தை ஒட்டுமொத்தமாக தென்னாப்பிரிக்கா பக்கம் மாற்றிக் காட்டியவர்.

இந்திய அணியின் சச்சின் டெண்டுல்கர், சேவாக், ராகுல் டிராவிட், விவிஎஸ் லக்ஷமண், தோனி உள்ளிட்டோர் இருந்த பேட்டிங் வரிசையை மொத்தமாக 76 ரன்களுக்கு சுருட்டியவர். இன் ஸிவிங்கர் தான் வீசப்போகிறார் என்பதை அறிந்தும் ஸ்டெய்ன் வீசும் பந்துகளை இந்திய அணியால் எதுவும் செய்ய முடியவில்லை. இன்னும் சொல்லப் போனால், டேல் ஸ்டெய்னை எதிர்கொள்ள வேண்டுமென்றால், நான் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் என்ற ஈகோவை கைவிட்ட பின்னரே வீரர்கள் மைதானத்திற்குள் களமிறங்க வேண்டும்.
இவ்வளவு ஏன், கிரிக்கெட் கடவுள் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் சச்சின் டெண்டுல்கரே, "நான் ஆடிய பந்துவீச்சாளர்களில் என்னை அதிகமாக அச்சுறுத்தியது டேல் ஸ்டெய்னின் பந்துகள் தான்" என்று கூறி இருக்கிறார். ஆம், நாக்பூரில் நடைபெற்ற ஒரு டெஸ்ட் போட்டியில் சச்சின் டெண்டுல்கரையே ஒரு வழி செய்திருப்பார் டேல் ஸ்டெய்ன். இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான வாஹன் களமிறங்கினால், பந்து நேரடியாக ஸ்டெய்ன் கைகளுக்கு சென்றுவிடும். அவரும் வழக்கம் போல் வாஹனின் கதையை முடித்து பெவிலியனுக்கு அனுப்பி வைப்பார். இது நெடுங்காலமாக நடைபெற்றது.
2009ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 இடத்தை யாருக்கும் டேல் ஸ்டெய்ன் விட்டுக் கொடுக்கவில்லை. சரியான சொல்ல வேண்டுமென்றால் 2,343 நாட்கள் அந்த இடத்தில் முடிசூடா மன்னன் போல் ஸ்டெய்ன் அமர்ந்துகொண்டிருந்தார். இன்றுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய டாப் வரிசையில் உள்ள வீரர்கள் யாரோடு ஒப்பிட்டாலும் ஸ்டெய்னின் ஸ்ட்ரைக் ரேட் அருகில் கூட யாராலும் வர முடியாது. அது ஆஸி. முன்னாள் வீரர் மெக்ராத்தாகவே இருந்தாலும் சரி..
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 93 போட்டிகளில் விளையாடியுள்ள டேல் ஸ்டெய்ன் 439 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் ஸ்டெய்ன் பேசிய போது, தென்னாப்பிரிக்காவின் தலைசிறந்த 4 பந்துவீச்சாளர்களை பற்றி மக்கள் பேசுவார்கள். அதில் ஆலன் டொனால்ட், நிடினி, பொல்லாக் ஆகியோரின் பெயர்களுக்கு பின் என் பெயர் இருக்க வேண்டும் என்று ஆசையை வெளிப்படுத்தி இருந்தார். ஆனால் தென்னாப்பிரிக்க மக்கள் மட்டுமல்லாமல், சர்வதேச கிரிக்கெட்டே பெருமை கொள்ளும் சாதனைகளை ஸ்டெய்ன் படைத்துள்ளார்.