ஐபிஎல் கண்டறிந்த தங்கம் நடராஜன்.. ஏலத்தில் சிறப்பு பாராட்டு.. அதிர்ந்த கரவொலி
சென்னை: ஐபிஎல் 2021 ஏல நிகழ்வில், தமிழக வீரர் நடராஜனுக்கு சிறப்பு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2021 ஏலம் சென்னையில் இன்று தொடங்கியுள்ளது. அணிகள் தங்கள் அணிக்கு தோதான வீரர்களை தேர்வு செய்வதில் போட்டி போடத் துவங்கியுள்ளன.
குறிப்பாக, பஞ்சாப், பெங்களூரு போன்ற பர்ஸில் அதிகம் தொகை வைத்திருக்கும் அணிகள், பல புதிய வீரர்களை எடுப்பதில் முனைப்போடு உள்ளன.

அசத்திய நடராஜன்
கடந்த 2020 ஐபிஎல் சீசனில், சொதப்பிய, அதிகம் பயன்படுத்தப்படாத பல வீரர்கள் அந்தந்த அணிகளில் இருந்து ரிலீஸ் செய்யப்பட்டுள்ளனர். அதேசமயம், முக்கியமான வீரர்களை அந்தந்த அணிகள் தக்க வைத்துள்ளன. அதில், சன்ரைசர்ஸ் அணி தக்க வைத்திருக்கும் முக்கியமான வீரர் நடராஜன்.

ஜாக்பாட் வாய்ப்பு
கடந்த சீசனில் யார்க்கர்களால் எதிரணியை ஆட்டம் காண வைத்த கண் கொள்ளா காட்சி மறைவதற்குள், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நெட் பவுலராக தேர்வானார் நடராஜன். அதுவே அவருக்கு கிடைத்த சிறந்த ஐபிஎல் பரிசு என்று பலரும் கூறிய நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில், சீனியர் வீரர்களின் காயத்தால், ஆஸி., மண்ணில் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் விளையாட நடராஜனுக்கு ஜாக்பாட் வாய்ப்பு அடித்தது.

அறிமுக உரை
அதை அப்படியே கச்சிதமாக பயன்படுத்திய நடராஜன், தனது சிறப்பான பவுலிங்கை ஆஸி., மண்ணிலும் நிரூபித்தார். இந்நிலையில், இன்று தொடங்கிய ஐபிஎல் ஏல நிகழ்வின் அறிமுக உரையில் பேசிய ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல், நடராஜனுக்கு பாராட்டுகளைத் தெரிவித்தார்.

மிகச் சிறந்த உதாரணம்
அப்போது, "ஐபிஎல் மூலம் திறமையான வீரர்கள் கண்டறியப்படுகிறார்கள். அதற்கு மிகச் சிறந்த உதாரணம் நடராஜன். நெட் பவுலராக சென்று, வரலாற்று சாதனைப் படைத்த இந்திய அணியிலும் அவர் இடம்பிடித்துவிட்டார்" என்று சொன்ன போது, அரங்கத்தில் அனைவரும் கரவொலி எழுப்பினர்.


Click it and Unblock the Notifications