Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ராஜஸ்தான் அபாரம்-சென்னை போராடி தோல்வி

சென்னை: சென்னையில் நடந்த ஐபிஎல் டுவென்டி 20 போட்டியில் முதலில் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடுமையாக போராடி 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

ஐபிஎல் டுவென்டி 20 தொடரில் டோணி தலைமையிலான சென்னை அணி இதுவரை 12 போட்டிகளில் ஆடியுள்ளது. இதில் 7ல் வென்று, 5ல் தோற்றுள்ளது. 14 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது.

சென்னை அணி இன்னும் இரு லீக் போட்டிகளில் மட்டும் ஆட வேண்டும். இதில் ஒன்றில் வென்றால் அது அரை இறுதிக்கு முன்னேறி விடும் என்ற நிலை இருந்தது.

இந்தப் பின்னணியில் ஷான் வார்னே தலைமையிலான வலுவான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை நேற்று சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ைதானத்தில் சந்தித்தது.

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் வார்னே முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

இளம் வீரர் அஸ்னூத்கரும், கிரீம் ஸ்மித்தும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அடித்து ஆட ஆரம்பித்தனர். ஆரம்பத்தில் அடக்கி வாசித்த ஸ்மித், பின்னர் அதிரடிக்கு மாறினார்.

இருவரும் சேர்ந்து பவுண்டரிகளையும், சிக்சர்களையும் விளாசியதால், ராஜஸ்தான் அணியின் ரன் படு வேகமாக எகிறியது. அதிரடியாக ஆடிய ஸ்மித் 51 பந்துகளில் 91 ரன்களைக் குவித்தார். இதில் 9 பவுண்டரிகளும், 4 சிக்சர்களும் அடக்கம். இறுதியில் ரெய்னா பந்தில் டோணியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் ஸ்மித்.

மறுபக்கம் அஸ்னோத்கர் 27 பந்துகளில் 41 ரன்களைக் குவித்து டோணியால் ரன் அவுட் செய்யப்பட்டார்.

இவர்கள் இருவரும் ஆட்டமிழந்தாலும் கூட கம்ரன் அக்மல் அட்டகாசமான ஆட்டத்ைதக் கொடுத்து ராஜஸ்தான் அணியின் ரன் குவிப்பின் வேகத்ைத கன்ட்ரோலில் வைத்திருந்தார். அபாரமாக ஆடிய அவர் 28 பந்துகளில் 53 ரன்களைக் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 211 ரன்களைக் குவித்தது ராஜஸ்தான் ராயல்ஸ்.

சென்னை அணித் தரப்பில் மார்க்கலுக்கு 2 விக்கெட்டுகளும், சுரேஷ் ரெய்னாவுக்கு ஒரு விக்கெட்டும் கிடைத்தது.

இதையடுத்து களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பதிலடியாக அதிரடி ஆட்டத்தைக் காட்டியது. தொடக்க ஆட்டக்காரரான பார்த்திவ் படேல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அடித்து ஆடிய அவர் 54 ரன்களைக் குவித்தார். மறு முனையில், ஸ்டீவன் பிளமிங் 7 ரன்களில் வீழ்ந்தார்.

இருப்பினும் அல்பி மார்க்கலும், சுரேஷ் ரெய்னாவும் படு சிறப்பாக ஆடி ரன்களைக் குவித்தனர். இருவரும் சேர்ந்து பட்டாசாக பொறிந்ததால் ரன் மழையில் சென்னை ரசிகர்கள் இணைந்தனர்.

இந்த ஜோடி பிரிந்ததும் சென்னை அணியிடம் துரதிர்ஷ்டம் வந்து ஒட்டிக் கொண்டது. மார்க்கல் ஒருமுனையில் போராடிக் கொண்டிருக்க மறு முனையில் வந்தவர்கள் எல்லாம் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பியவண்ணம் இருந்தனர்.

டோணி 12 ரன்களும், பத்ரிநாத் 1 ரன்னிலும் வீழ்ந்தனர். கடைசிக் கட்டத்தில் கூட சென்னை அணிக்கு வெற்றி வாய்ப்பு இருந்தது. ஆனால் அடித்து ஆடக் கூடிய வீரர்கள் இல்லாததால், சென்னை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 201 ரன்களில் வீழ்ந்தது. 10 ரன்களில் தோல்வியைத் தழுவியது.

ராஜஸ்தான் அணியின் சொஹைல் தன்வீர் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை சாய்த்தார். கேப்டன் வார்னே தன் பங்குக்கு 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

பந்து வீச்சிலும், பேட்டிங்கிலும் கலக்கிய மார்க்கல் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்தப் போட்டியில் தோல்வியைத் தழுவியதன் மூலம் மிச்சமுள்ள ஒரு போட்டியில் சென்னை வென்றால்தான் அரை இறுதிக்கு முன்னேற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை சென்னை அணி, டெக்கான் சார்ஜர்ஸ் அணியைச் சந்திக்கவுள்ளது.

டெல்லி அபார வெற்றி - திணேஷ் கார்த்திக் கலக்கல்

டெல்லியில் நடந்த மற்றொரு போட்டியில் டெல்லி டேர் டெவில்ஸ் அணி, திணேஷ் கார்த்திக்கின் அபார ஆட்டத்தால் வெற்றி பெற்று அரை இறுதிக்கான இடத்தை பலப்படுத்திக் கொண்டது.

முதலில் ஆடிய மும்பை அணியின் ஜெயசூர்யா அதிரடி ஆட்டத்தைக் காட்டினார். ஆனால் டென்டுல்கரோ வழக்கம் போல ஏமாற்றினார். 18 ரன்களில் டென்டுல்கர் பெவிலியன் திரும்பினார். ஜெயசூர்யா தொடர்ந்து அதிரடியாக ஆடி 66 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார்.

அதேபோல ராபின் உத்தப்பாவும் அதிரடியாக ஆடி 49 ரன்களைக் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஷான் போலக் 16 ரன்களைச் சேர்க்க 20 ஓவர்கள் இறுதியில் 8 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களை எடுத்தது.

பின்னர் ஆடிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கெளதம் கம்பீர் 19 ரன்களும், ஷேவாக் 18 ரன்களும் எடுத்து வீழ்ந்தனர். பின்னர் வந்த தவன் 27 ரன்கள் சேர்த்தார். மனோஜ் திவாரி சிறப்பாக ஆடி 36 ரன்களைக் குவித்தார்.

ஒரு கட்டத்தில் டெல்லி அணி தோல்வி அடையுமோ என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் திணேஷ் கார்த்திக் வந்து அதிரடியாக ஆடி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார். 3 சிக்சர்கள், 4 பவுண்டரிகளுடன் 32 பந்துகளில் 56 ரன்களை விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து டெல்லி அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார். அருடன் மெஹரூப் 20 ரன்களுடன ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இறுதியில், ஒரு பந்து மட்டுமே மீதமிருந்த நிலையில், 5 விக்கெட்டுக்களை இழந்து 179 ரன்களை எடுத்து டெல்லி அணி திரில் வெற்றியைப் பெற்றது.

ஆட்ட நாயகனாக திணேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டார்.

Story first published: Wednesday, December 7, 2011, 17:18 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+