ஐபிஎல் எதிர்காலம் - பிசிசிஐ நாளை அவசர ஆலோசனை
மும்பை: ஐபிஎல் போட்டிகளின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. இதுதொடர்பாக மத்திய உள்துறை தொடர்ந்து ஆட்சேபித்து வருவதாலும், பல மாநில அரசுகள் தேர்தலின்போது போட்டிகளுக்கு பாதுகாப்பு தர முடியாது என கூறி விட்டதாலும் இதுகுறித்து முடிவெடுக்க நாளை இந்திய கிரிக்கெட் வாரியம் கூடுகிறது.
கிரிக்கெட் வாரியத்தின் செயற்குழுக் கூட்டம் அவசரமாக நாளை கூட்டப்பட்டுள்ளது. இதில் ஐபிஎல் 2வது போட்டித் தொடரை நடத்துவதா, வேண்டாமா, எப்படி நடத்துவது என்பது குறித்து நாளை ஆலோசிக்கப்படவுள்ளது.
ஐபிஎல் 2வது போட்டித் தொடருக்கு தேர்தல் காலத்தில் நடத்தினால் பாதுகாப்பு தர முடியாது என பல மாநில அரசுகள் கூறி விட்டன. இதனால் உள்துறை அமைச்சகமும், போட்டிகளை நடத்துவதற்கு பச்சைக் கொடி காட்டவில்லை.
இருமுறை போட்டி அட்டவணையைத் திருத்தியும் கூட அதை உள்துறை அமைச்சகம் ஏற்கவில்லை. இதனால் போட்டித் தொடரின் எதிர்காலம் குறித்து விவாதிக்க இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அவசர செயற்குழு நாளை கூடுகிறது.


Click it and Unblock the Notifications