ஸ்ரீசாந்த்துக்கு 'பளார்' விட்ட ஹர்பஜனுக்கு பிசிசிஐ நோட்டீஸ்

மொகாலியில் கிங்ஸ் ஆப் லெவன் பஞ்சாப் அணிக்கும், மும்பை இந்தியன்சுக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் யுவராஜ் சிங் தலைமையிலான கிங்ஸ் ஆப் லெவன் பஞ்சாப் அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வெற்றியை கொண்டாடும் சந்தோஷத்தில் எதிரணி கேப்டன் ஹர்பஜன்சிங்கை நெருங்கி ஏதோ கூறினார் ஸ்ரீசாந்த். 'அதிர்ஷ்டம் இல்லை' என்று ஸ்ரீசாந்த் கூறி அவரை வெறுப்பேற்றியதாக தெரிகிறது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடுப்பான ஹர்பஜன் ஸ்ரீசாந்த்தின் கன்னத்தில் பளாரென்று அறைந்தார். இதனை சற்றும் எதிர்பாராத ஸ்ரீசாந்த் , அந்த இடத்திலேயே அதிர்ச்சியில் கண்ணீர் விட்டு அழுதார். பஞ்சாப் அணியின் உரிமையாளர் நடிகை பிரீத்தி ஜிந்தா மற்றும் சகவீரர்கள் அவரை தேற்றினர்.
இது பற்றி ஐபிஎல் நிர்வாகிகளிடம் ஹர்பஜன் மீது புகார் செய்யவேண்டும் என்று பஞ்சாப் கிங்ஸ் அணியினர் முடிவுசெய்தனர். இந்த நிலையில் டிரஸ்ஸிங் அறையில் வைத்து நடந்த சம்பவத்துக்கு ஸ்ரீசாந்திடம் ஹர்பஜன் சிங் மனிப்பு கேட்டுக்கொண்டார்.
ஏற்கெனவே கடந்த ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் அந்நாட்டு வீரர் சைமண்ட்ஸ் மீது இன துவேஷமாக பேசியதாக சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ள ஹர்பஜன் மீது இந்திய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த சம்பவம் பற்றி ஹர்பஜனிடம் நிருபர்கள் கேட்டதற்கு அவர் பதில் சொல்லாமல், கிரிக்கெட் பற்றி ஏதாவது கேளுங்களேன். ஸ்ரீசாந்தை நான் அறைந்ததாக கூறுவது தவறு. இது முடிந்து போன விவகாரம். தேவையில்லாமல் இதை ஊதிப் பெரிதாக்கி விட்டார்கள்.
நாங்கள் ஒரு குடும்பம் போல. அதற்குள் எத்தனையோ விவகாரங்கள் நடக்கும். ஸ்ரீசாந்த் என் இளைய சகோதரர்போல. மொகாலி போட்டி முடிந்தபிறகு நேற்று இரவில்கூட ஸ்ரீசாந்த்துடன் பேசிக்கொண்டிருந்தேன் என்றார். ஆனாலும் ஸ்ரீசாந்த்திடம் கோபப்படும் அளவுக்கு என்ன நடந்தது என்பதைப் பற்றி மட்டும் ஹர்பஜன் வாயே திறக்கவில்லை.
அறைவாங்கியது பற்றி ஸ்ரீசாந்தும் வெளிக்காட்டிக் கொள்ள விரும்பவில்லை. விளையாட்டில் இப்படி நடப்பதெல்லாம் சகஜம். மோசமாக ஒன்றும் ஆகிவிடவில்லை. நான் வருத்தப்படவில்லை. இந்திய அணியில் தொடர்ந்து ஒற்றுமையாகவே இருப்போம் என்றார் ஸ்ரீசாந்த். தங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை. இந்த விவகாரத்தை இத்துடன் விட்டுவிடுமாறு ஹர்பஜனும், ஸ்ரீசாந்த்தும் கோரியுள்ளனர்.
ஆனால், 'இது ஓர் அசிங்கம்' என்று பஞ்சாப் அணி கேப்டன் யுவராஜ்சிங் கூறினார். ஹர்பஜன் நடவடிக்கையை கண்டிக்கும் வகையில் அவர் பேசினார். அவர் மேலும் கூறுகையில், 'இது ஒரு மோசமான சம்பவம். வெற்றி பெற்று சந்தோஷமான மனநிலையில் இருக்கும்போது மைதானத்துக்கு வெளியே இப்படி நடந்து கொள்வதை யாரும் விரும்பமாட்டார்கள். இந்த சம்பவம் எனக்கு வருத்தமளிக்கிறது. முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம் இது' என்றார்.
அணி மேனேஜர் டாம் மூடியும் ஹர்பஜன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றே கருதுகிறார்.
ஹர்பஜனுக்கு நோட்டீஸ்:
இந்த நிலையில், ஸ்ரீசாந்த்தை அடித்தது குறித்து விளக்கம் அளிக்குமாறு ஹர்பஜன் சிங்குக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
திங்கள்கிழமைக்குள் பதில் தர வேண்டும் எனவும் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது. மொஹாலி மைதானத்தில் நீங்கள் நடந்து கொண்ட முறைக்காக ஏன் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று அந்த நோட்டீஸில் கிரிக்கெட் வாரியம் கேட்டுள்ளது.
இதுகுறித்து வாரிய செயலாளர் நிரஞ்சன் ஷா கூறுகையில், இப்போதைக்கு விளக்கம் கேட்டு ஹர்பஜனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்த வீரராக ஹர்பஜன் உள்ளார். எனவே வீரர்களுக்கான நடத்தை விதிமுறைகளை அவர் பின்பற்ற வேண்டும் என்றார்.
ஹர்பஜன் சிங் தனது விளக்கத்தை அளித்ததும் அதுகுறித்து கிரிக்கெட் வாரியத்தின் ஒழுங்கு நடவடிக்ைக குழு கூடி விவாதித்து முடிவெடுக்கும்.
Story first published: Wednesday, December 7, 2011, 17:19 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications