அரை இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ஹைதராபாத் அவுட்!

ஹைதராபாத்தில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணியும் முக்கியப் போட்டியில் மோதின. ஹைதராபாத் அணிக்கு இந்தப் போட்டி எந்த வகையிலும் முக்கியமானல்ல. காரணம் ஏற்கனவே அது அரை இறுதிக்கான வாய்ப்பை நழுவ விட்டிருந்தது. ஆனால் சென்னை அணி வெற்றி பெற்றால்தான் அரை இறுதிக்கு முன்னேற முடியும் என்ற நிலை நிலவியது.
இந்த நிலையில் நேற்று நடந்த போட்டியில் சென்னை அணி அபார வெற்றி பெற்று அரை இறுதியில் இடம் பிடித்தது.
முதலில் ஆடிய டெக்கான் சார்ஜர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்களை எடுத்தது. அந்த அணியின் வேணுகோபால ராவ் 46 ரன்களை எடுத்தார். அதேபோல ரவி தேஜாவும் சிறப்பாக ஆடி 28 பந்துகளில் 40 ரன்களைக் குவித்தார்.
அதிரடி வீரர்களான கில்கிறைஸ்ட் 5 ரன்களுடனும், கிப்ஸ் 8 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர். ஸ்டைரிஸ் தன் பங்குக்கு 20 ரன்களைச் சேர்த்தார்.
148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை களம் இறங்கியது. பார்த்திவ் படேல் 27 பந்துகளைச் சந்தித்து 20 ரன்களைச் சேர்த்தார். ஸ்டீவன் பிளமிங் 9 பந்துகளில் 14 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த சுரேஷ் ரெய்னா ரன் மழை பொழிந்தார். வந்த பந்துகளையெல்லாம் அடித்து விளாசிய அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து, 43 பந்துகளில் 54 ரன்களைக் குவித்தார். இதில் 2 சிக்சர்கள், 5 பவுண்டரிகள் அடக்கம்.
அதேபோல கேப்டன் டோணியும் சிறப்பாக ஆடி 25 பந்துகளில் 37 ரன்களைக் குவித்தார். மார்க்கல் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 12 ரன்களைச் சேர்த்தார். இறுதியில், 19.2 ஓவர்களில் சென்னை அணி 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 148 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.
சுரேஷ் ரெய்னா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் ஹைதராபாத் அணிக்கு கடைசி இடம் கிடைத்துள்ளது. சென்னை அணி 3வது இடத்திற்கு முன்னேறி அரை இறுதிச் சுற்றில் இடம் பெற்றது.
அரை இறுதியில் வலுவான பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் சந்திக்கவுள்ளது.
இன்று மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதவுள்ளன. ஆனால் இரு அணிகளும் ஏற்கனவே அரை இறுதிக்கான வாய்ப்புகளை இழந்து விட்டதால் இது சம்பிரதாயப் போட்டியாகவே இருக்கும்.
இன்னொரு போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியும் மோதுகின்றன. இரு அணிகளும் ஏற்கனவே அரை இறுதிக்குள் நுழைந்து விட்டதால் இரு அணியினருக்கும் இது பயிற்சி ஆட்டமாக அமையும்.
இன்றுடன் சுற்றுப் போட்டிகள் முடிவுக்கு வருகின்றன.
Story first published: Wednesday, December 7, 2011, 17:18 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications