போர்ட் எலிசபெத்: டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் டுவென்டி-20 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. மற்றொரு போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி டேர் டெவில்ஸ் அணியை தோற்கடித்தது.
ஐபிஎல் டுவென்டி-20 தொடர் தென் ஆப்ரிக்காவில் நடக்கிறது. நேற்று நடந்த முதல் லீக் போட்டியில் கில்கிறிஸ்ட் தலைமையிலான டெக்கான் சார்ஜர்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது.
டாஸ் வென்ற கில்கிறிஸ்ட் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். துவக்க வீரர் கிப்ஸ் 8 ரன்களுக்கு அவுட்டானார். மறுமுனையில் அதிரடியாக பேட் செய்த கில்கிறிஸ்ட் 2 சிக்சர், 5 பவுண்டரி உட்பட 39 ரன்கள் எடுத்தார்.
ரோகித் சர்மா 38, சுமன் 41 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் விரைவில் வெளியேற, டெக்கான் சார்ஜர்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்தது.
அடுத்து பேட் செய்த ராஜஸ்தான் அணிக்கு துவக்க வீரர்கள் ஸ்மித், அஸ்னோட்கர் இருவரும் டக் அவுட்டாகி ஏமாற்றினர். கார்சல்டைன் 39 ரன்கள் எடுத்தார். கடைசியில் வந்த யூசுப் பதான் 24 ரன்கள் எடுத்தார். நன்றாக பேட் செய்த ரவாத் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 36 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பாதையில் அழைத்து சென்றார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் 19.4 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்து வென்றது.
பத்ரிநாத் அதிரடி சென்னை அபாரம்...
நேற்று நடந்த இரண்டாவது போட்டியில் டோணி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி டேர் டெவில்ஸ் அணியை எதிர்கொண்டது. டெல்லி அணியில் காயமடைந்த ஷேவாக்கிற்கு பதிலாக வார்னர் களமிறக்கப்பட்டார்.
டாஸ் வென்ற டெல்லி கேப்டன் கம்பீர் முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. சென்னை அணியில் பார்த்திவ் படேலுக்கு பதிலாக விஜய்க்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. துவக்க வீரராக வந்த இவர் 14 ரன்களுக்கு அவுட்டானார்.
அதிரடியாக விளையாடிய ஹைடன் 19 பந்தில் 30 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த ரெய்னா வழக்கம் போல் விளாசினார். 2 சிக்சர், 2 பவுண்டரி உட்பட 21 பந்தில் 32 ரன்கள் சேர்த்தார்.
நான்காவது வீரராக வந்த பத்ரிநாத்தும் தனது பங்கிற்கு டெல்லி பந்துவீச்சை சிக்சரும், பவுண்டரியுமாக அடித்து நொறுக்கினார். இவர் 2 சிக்சர், 4 பவுண்டரி உட்பட 34 பந்தில் 45 ரன்கள் எடுத்தார். இதையடுத்து சென்னை அணி 15 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 130 ரன்களை தொட்டது.
இதனால் மிகப்பெரிய ஸ்கோரை சென்னை எட்டும் என எதிர்பார்கக்ப்பட்டது. ஆனால் அடுத்து வந்த கேப்டன் டோணி (6) உள்ளிட்ட வீரர்கள் வரிசையாக வெளியேற சென்னை 20 ஓவரில் 163 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.
அடுத்து பேட் செய்த டெல்லி அணிக்கு கம்பீர் 13, டிவிலியர்ஸ் 0, தில்ஷன் 13 மோசமான துவக்கம் தந்தனர். அடுத்த வந்த தினேஷ் கார்த்திக், வார்னருடன் ஜோடி சேர்ந்து மிரட்டினார். இதையடுத்து போட்டி மெல்ல டெல்லி வசம் சென்றது.
சிறப்பாக பேட் செய்த வார்னர் 51 ரன்களுக்கு அவுட்டானார். இவரை தொடர்ந்து தினேஷ் கார்த்திக்கும் 31 பந்தில் 52 ரன்கள் எடுத்து, அவுட்டாக சென்னையில் வெற்றி உறுதியானது. டெல்லி அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்து, 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.