சென்னை: சென்னையில் நடந்த ஐபிஎல் டுவென்டி 20 போட்டியில் முதலில் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபாரமாக ஆடி 211 ரன்களைக் குவித்தது.
ஐபிஎல் டுவென்டி 20 தொடரில் டோணி தலைமையிலான சென்னை அணி இதுவரை 12 போட்டிகளில் ஆடியுள்ளது. இதில் 7ல் வென்று, 5ல் தோற்றுள்ளது. 14 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது.
சென்னை அணி இன்னும் இரு லீக் போட்டிகளில் மட்டும் ஆட வேண்டும். இதில் ஒன்றில் வென்றால் அது அரை இறுதிக்கு முன்னேறி விடும் என்ற நிலை இருந்தது.
இந்தப் பின்னணியில் ஷான் வார்னே தலைமையிலான வலுவான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை இன்று சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் சந்தித்தது.
டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் வார்னே முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
இளம் வீரர் அஸ்னூத்கரும், கிரீம் ஸ்மித்தும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அடித்து ஆட ஆரம்பித்தனர். ஆரம்பத்தில் அடக்கி வாசித்த ஸ்மித், பின்னர் அதிரடிக்கு மாறினார்.
இருவரும் சேர்ந்து பவுண்டரிகளையும், சிக்சர்களையும் விளாசியதால், ராஜஸ்தான் அணியின் ரன் படு வேகமாக எகிறியது. அதிரடியாக ஆடிய ஸ்மித் 51 பந்துகளில் 91 ரன்களைக் குவித்தார். இதில் 9 பவுண்டரிகளும், 4 சிக்சர்களும் அடக்கம். இறுதியில் ரெய்னா பந்தில் டோணியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் ஸ்மித்.
மறுபக்கம் அஸ்னோத்கர் 27 பந்துகளில் 41 ரன்களைக் குவித்து டோணியால் ரன் அவுட் செய்யப்பட்டார்.
இவர்கள் இருவரும் ஆட்டமிழந்தாலும் கூட கம்ரன் அக்மல் அட்டகாசமான ஆட்டத்தைக் கொடுத்து ராஜஸ்தான் அணியின் ரன் குவிப்பின் வேகத்ைத கன்ட்ரோலில் வைத்திருந்தார். அபாரமாக ஆடிய அவர் 28 பந்துகளில் 53 ரன்களைக் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 211 ரன்களைக் குவித்தது ராஜஸ்தான் ராயல்ஸ்.
சென்னை அணித் தரப்பில் மார்க்கலுக்கு 2 விக்கெட்டுகளும், சுரேஷ் ரெய்னாவுக்கு ஒரு விக்கெட்டும் கிடைத்தது.