ஸ்ரீசாந்தை அறையவில்லை- ஹர்பஜன் மறுப்பு

மொகாலியில் மும்பை அணிக்கு எதிராக நடந்த போட்டி முடிந்தபோது மைதானத்தில் பஞ்சாப் அணி வீரர் ஸ்ரீசாந்த் அழுதுகொண்டே நின்றிருந்தார். அதைப்பார்த்து பதறிப்போன சகவீரர்கள் ஸ்ரீசாந்தை அமைதிப்படுத்த முயன்றனர்.
பஞ்சாப் அணியின் உரிமையாளர் நடிகை பிரித்தி ஜிந்தாவும் மைதானத்துக்குள் வந்து ஸ்ரீசாந்தை ஆசுவாசப்படுத்தினார்.
ஆனாலும் ஸ்ரீசாந்த் கன்னத்தில் வழிந்தோடிய கண்ணீரைத் துடைத்துக்கொண்டே நீண்டநேரமாக நின்றிருந்தார். இந்த காட்சியை டிவி சேனல்கள் தொடர்ந்து ஒளிபரப்பிக் கொண்டிருந்தன.
தோற்ற வெறுப்பில் இருந்த ஹர்பஜனிடம் சென்று ஸ்ரீசாந்த் 'பேட் லக்' என்று கூறியதாகவும் இதனால் மேலும் கடுப்படைந்த ஹர்பஜன், ஸ்ரீசாந்த் கன்னத்தில் அறைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவத்தை பஞ்சாப் அணி கேப்டன் யுவராஜ் சிங், மேலாளர் டாம் மோடி ஆகியோர் கண்டித்துள்ளனர்.
இதனிடையில் வீரர்கள் உடைமாற்றும் அறைக்கு சென்று ஸ்ரீசாந்திடம் ஹர்பஜன் நீண்டநேரமாகப் பேசிக்கொண்டிருந்தார். நடந்த செயலுக்கு ஹர்பஜன் மன்னிப்பு கேட்டதாகவும் தெரிகிறது.
இதுபற்றி வரும் 28ம் தேதிக்குள் விளக்கம் அளிக்கவேண்டும் என்று ஹர்பஜனுக்கு இந்திய கிரிக்கெட் வாரியமும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந் நிலையில் நிருபர்களிடம் ஹர்பஜன் பேசுகையில், ஸ்ரீசாந்தை நான் அறைந்ததாக கூறுவது தவறு. இது முடிந்து போன விவகாரம். தேவையில்லாமல் இதை ஊதிப் பெரிதாக்கி விட்டார்கள்.
நாங்கள் ஒரு குடும்பம் போல. அதற்குள் எத்தனையோ விவகாரங்கள் நடக்கும். ஸ்ரீசாந்த் என் இளைய சகோதரர்போல. மொகாலி போட்டி முடிந்தபிறகு நேற்று இரவில்கூட ஸ்ரீசாந்த்துடன் பேசிக்கொண்டிருந்தேன் என்றார்.
தங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை. இந்த விவகாரத்தை இத்துடன் விட்டுவிடுமாறு ஹர்பஜனும், ஸ்ரீசாந்த்தும் கோரியுள்ளனர்.
ஆனாலும் ஸ்ரீசாந்த்திடம் கோபப்படும் அளவுக்கு என்ன நடந்தது என்பதைப் பற்றி மட்டும் ஹர்பஜன் வாயே திறக்கவில்லை.
Story first published: Wednesday, December 7, 2011, 17:19 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications