'பளார்' விசாரணை முடிந்தது: மே 12ல் அறிக்கை
அகமதாபாத்: கன்னத்தில் அறைந்த விவகாரம் தொடர்பாக ஹர்பஜன் சிங், ஸ்ரீசாந்த் நேரில் விளக்கம் அளித்தநிலையில் விசாரணை முடிந்ததாக ஐசிசி கமிஷனர் நானாவதி கூறினார்.
ஐபிஎல் லீக் போட்டியின் போது கடந்த 25ம் தேதி நடந்த போட்டியில் தோல்வி அடைந்த கடுப்பில் எதிரணி வீரர் ஸ்ரீசாந்தை கன்னத்தில் ஹர்பஜன் சிங் அறைந்தார். இதையடுத்து ஐபிஎல் போட்டிகளில் விளையாட ஹர்பஜனுக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக கிரிக்கெட் வாரியத்தால் நியமிக்கப்பட்ட கமிஷனர் வக்கீல் சுதிர் நானாவதி விசாரணை நடத்தி வருகிறார். சம்பவம் தொடர்பான வீடியோ ஆதாரங்களை பார்த்து அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்த நானாவதி சம்பந்தப்பட்ட ஹர்பஜனையும், ஸ்ரீசாந்த்தையும் இன்று ஆஜராகும்படி சம்மன் அனுப்பியிருந்தார்.
இதையடுத்து பிற்பகல் 2 மணியளவில் இருவரும் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர். அவர்களது விளக்கங்களை பதிவு செய்த நானாவதி இத்துடன் இந்த விவகாரம் பற்றிய விசாரணை முடிந்ததாக தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில்,இருவர் கூறிய விளக்கம் பற்றி வேறு யாரையும் குறுக்கு விசாரணை செய்யப்போவதில்லை. யாரையும் மன்னிக்கும் அதிகாரம் எனக்கு இல்லை. எனக்குத் தேவையான அத்தனை விவரங்களையும் இந்த விசாரணையில் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.ஹர்பஜன், ஸ்ரீசாந்த் அளித்த விளக்கங்களில் எனக்கு முழு திருப்தி. இருவரையும் தனித்தனியாக விசாரித்தேன். ஹர்பஜனுடன் ஒன்றரை மணிநேரமும், ஸ்ரீசாந்துடன் அரை மணி நேரமும் பேசினேன். இவ்வாறு அவர் கூறினார்.
விசாரணை இறுதி அறிக்கையை வரும் 12ம் தேதியன்று இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சரத் பவாரிடமும், வாரிய ஒழுங்கு நடவடிக்கை குழுவிடமும் மேல்நடவடிக்கைக்காக நானாவதி சமர்ப்பிக்கிறார்.
பவார், சஷாங்க் மனோகர் மற்றும் சிராயு அமின் ஆகியோர் இந்த ஒழுங்கு நடவடிக்கை குழுவில் உள்ளனர். வீரர்களுக்கு முன்னுதாரணமாக பாடம் கற்பிக்கும் வகையில் இந்த விவகாரத்தில் ஹர்பஜனுக்கு தண்டனையளிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications