மும்பை: சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளை முறியடிப்பது சாதாரணமல்ல, சற்று கடினமானது என்று கூறியுள்ளார் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பான்டிங்.
மும்பையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சச்சின் நிகழ்த்தி வைத்துள்ள சாதனைகள் மிகப் பெரியவை. அவற்றை என்னால் முறியடிக்க முடியுமா என்பது சந்தேகம்தான். எனவேதான் எனது அணியின் வெற்றியை மட்டும் மனதில் வைத்து ஆடி வருகிறேன்.
சச்சின் சீக்கிரமே ஓய்வு பெற்றால் நன்றாக இருக்கும். இதுகுறித்து அவரிடமே நான் தென் ஆப்பிரிக்காவில் விளையாடியபோது கேட்டேன். சர்வதேச வீரர்களுக்கு அவர் ஒரு பெஞ்ச் மார்க் ஆக உள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் தற்போது 20வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளார் சச்சின் என நினைக்கிறேன். இதுவே ஒரு மிகப் பெரிய சாதனையாகும்.
ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சச்சின் நிகழ்த்தியுள்ள சாதனைகளை முறியடிப்பது என்பது எனக்கு மட்டுமல்ல எந்த வீரருக்குமே சவாலான விஷயம்தான்.
இந்தியாவுடன் ஏழு போட்டிகள் என்பது சற்று நீளமான ஒன்று. ஐந்து போட்டிகளாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
இந்தியாவை இந்திய மண்ணில் வீழ்த்துவது நிச்சயம் கடினமானது என்றார் பான்டிங்.
இந்தியாவுடன் 7 ஒரு நாள் போட்டிகளி்ல் ஆடுவதற்காக ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அக்டோபர் 25ம் தேதி முதல் இந்தியா - ஆஸ்திரேலியா ஒரு நாள் தொடர் தொடங்குகிறது.
தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக, ஆஸ்திரேலிய அணிக்கு மிக பலத்த பாதுகாப்பு தரப்பட்டுள்ளது.