இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரை வென்றது இந்தியா
கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 147 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, தொடரை 3-0 என கைப்பற்றியது. யுவராஜ், ஷேவாக் சதம் கடக்க இந்தியா 50 ஓவரின் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 363 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய இலங்கை 216 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.
இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒரு நாள் மற்றும் ஒரு டுவென்டி-20ல் போட்டியில் விளையாட இருக்கிறது.
முதல் இரண்டு போட்டியில் வென்ற இந்திய அணி தொடரில் 2-0 என்ற முன்னிலையில் இருக்கிறது. மூன்றாவது போட்டி நேற்று கொழும்பு நகரில் நடந்தது.
முதலில் பேட் செய்த இந்தியா அபாரமாக ஆடி 363 ரன்களைக் குவித்தது.
சச்சின் மறுபடியும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். கம்பீர் 10 ரன்களுடன் திரும்பினார்.
ஆனால் யுவராஜ் சிங்கும், ஷேவாக்கும் இணைந்து இலங்கை பந்து வீச்சாளர்களை பென்டு நிமிர்த்தி விட்டனர்.
யுவராஜ் சிங்கும், ஷேவாக்கும் தலா ஒரு சதம் போட்டு இந்தியாவை வலுவான நிலைக்கு இட்டுச் சென்றனர். இந்த சதம் யுவராஜுக்கு 11வது சதமாகும். ஷேவாக்குக்கு 10வது சதம். இருவரும் இணைந்து 3வது விக்கெட்டுக்கு 217 ரன்கள் குவித்தனர்.
யுவராஜ் சிங் விக்கெட்டை வீழ்த்தி 502 விக்கெட்களை வீழ்த்தி வாசிம் அக்ரமின் உலக சாதனையை சமன் செய்தார் முரளீதரன்.
பின்னர் வந்த யூசுப் பதானும், கேப்டன் டோணியும் அபாரமாக ஆடினர். யூசுப் பதான் 59 ரன்களுடனும், டோணி 35 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்கவில்லை. இறுதியில், இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை மட்டுமே இழந்து 363 ரன்களைக் குவித்தது.
பின்னர் ஆடிய இலங்கை அணிக்கு துவக்கம் நன்றாக அமையவில்லை. மிகவும் எதிர்பார்க்க்ப்பட்ட ஜெயசூர்யா பிரவீண் குமார் பந்தில் டக் அவுட்டானார். தில்ஷனை(31) ஜாகிர் பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார்.
ஜெயவர்தனா 30, கந்தம்பி 10, மகரூப் 22 ரன்களுக்கு அவுட்டானார்கள். சங்ககரா 83 ரன்கள் எடுத்து இலங்கை ரசிகர்களுக்கு ஆறுதல் தந்தார். இலங்கை 41.4 ஓவரில் 216 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகியது. இந்தியா சார்பில் ஓஜா 4 விக்கெட் எடுத்தார்.
147 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி தொடரை 3-0 என கைப்பற்றியது. இது ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணி தொடர்ச்சியாக பெறும் 8வது வெற்றியாகும். ஆட்டநாயகன் விருது யுவராஜ் சிங்கிற்கு அளிக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications