ஜமைக்கா: மேற்கு இந்தியத் தீவுகளில் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் அங்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள் பீதியில் உள்ளனர். ஹோட்டலுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்களாம்.
பன்றிக் காய்ச்சல் உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகிறது. கரீபியன் தீவுகளிலும் இந்த காய்ச்சல் பரவியுள்ளது.
டிரினிடாட் தீவில் பன்றிக் காய்ச்சல் வேகமாகப் பரவியுள்ளது. இதனால் அங்கு அனைத்து வகையான விளையாட்டுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதையடுத்து இந்திய கிரிக்கெட் அணியினர் பங்கேற்கவிருந்த பயிற்சி ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்திய வீரர்கள் பன்றிக் காய்ச்சல் தொற்றி விடுமோ என்ற பயத்தில் ஹோட்டல் அறைகளை விட்டு வெளியே வராமல் முடங்கிக் கிடக்கின்றனர்.
இந்திய அணியினர் தற்போது டிரினிடாடில் இல்லை. அங்கு இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகளுக்கு இடையிலான போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை. ஆனால் டிரினிடாட் அருகில்தான் இந்திய அணியினர் தங்கியுள்ள ஜமைக்கா தீவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவும், மேற்கு இந்தியத் தீவுகள் அணியும் நான்கு போட்டிகளில் மோதவுள்ளன.
நாளை முதல் போட்டி...
முதல் போட்டி நாளை நடைபெறுகிறது. ஜமைக்காவில் உள்ள கிங்ஸ்டன் நகரில் இந்தப் போட்டி நடக்கிறது. 2வது போட்டி இதே கிங்ஸ்டனில் 28ம் தேதி நடக்கிறது.
செயின்ட் லூசியாவில் ஜூலை 3ம் தேதி 3வது போட்டியும், 5ம் தேதி நான்காவது போட்டியும் நடைபெறும்.
நாளை நடைபெறும் முதல் போட்டி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்குத் தொடங்கும்.
உலகக் கோப்பை டுவென்டி 20 போட்டித் தொடரில் இந்தியா படு மோசமாக ஆடியது. மேற்கு இந்தியத் தீவுகள் அணியிடம் மகா மோசமாகவும் தோரற்றது.
எனவே நாளைய போட்டியி்ல் அதற்குப் பழி வாங்கும் வகையி்ல இந்தியா ஆடலாம் எனத் தெரிகிறது.
டோணி தலைமயிலான இந்திய அணியில் சச்சின், ஷேவாக், ஜாகிர்கான் ஆகிய ஜாம்பவான்கள் இல்லை. ரொம்ப காலத்திற்குப் பிறகு வேகப் பந்து வீச்சாளர் ஆசிஷ் நெஹ்ரா வந்துள்ளார்.
இவர்கள் தவிர யுவராஜ் சிங், யூசுப் பதான், ஆர்.பி.சிங், ஹர்பஜன் சிங் ஆகியோர் உள்ளனர்.
மேற்கு இந்தியத் தீவுகள் அணியில் பந்து வீச்சு பலமாக உள்ளது. பேட்டிங்கில் கேப்டன் கெய்ல், ராம் நரேஷ் சர்வான், சந்தர்பால், பிரேவா ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர்.
கடந்த முறை (2006) இந்திய அணி மேற்கு இந்தியத் தீவுகளுடன் மோதியபோது 1-4 என்ற தோல்வியுடன் திரும்பியது. இந்த முறை ஜெயித்து விட்டு வரட்டும் என வேண்டிக் கொள்வோம்.