சென்னை: ஐபிஎல் டுவென்டி 20 கிரிக்கெட் தொடரில் நாளை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னையில் மோதவுள்ளன. விருந்தை ருசிக்க ரசிகர்கள் ஆவலோடு காத்துள்ளனர். போட்டியையொட்டி பலத்த பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யபப்ட்டுள்ளது.
விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் நாளை டோணி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹர்பஜன் சிங் தலைமையிலா மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதவுள்ளன. சென்னை சேப்பாக்கத்தில் இப்போட்டி நடைபெறுகிறது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் சச்சின் டெண்டுல்கர் காயம் காரணமாக விளையாடவில்லை. இதனால் ஹர்பஜன் சிங் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மொத்தம் 7 ஆட்டங்கள் நடைபெற உள்ளன. முதல் ஆட்டம் நாளை நடைபெறுகிறது.
போட்டியில் பங்கேற்கும் சென்னை அணி நேற்று சென்னை வந்து சேர்ந்து விட்டது. மும்பை வீரர்கள் இன்று நண்பகல் சென்னை வந்தடைந்தனர்.
சென்னை அணியின் விளம்பர தூதர்களாக நியமிக்கப்பட்டுள்ள நடிகர் விஜய் மற்றும் நயன்தாரா நாளை மைதானத்திற்கு வருகை தந்து போட்டியை காண உள்ளனர். ரசிகர்களையும் அவர்கள் உற்சாகப்படுத்துவார்கள்.
இதுதவிர கலக்கலான இசை நிகழ்ச்சியும் நடைபெறும். நளினமான நடன மாதுக்கள் பங்கேற்கும் கலக்கல் டான்ஸ் ஷோவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆட்டத்தை விட இந்த அழகிகளின் அழகாட்டம் தான் படு அமர்க்களமாக இருக்கிறது.
டோனி தலைமையிலான வீரர்கள் இன்று சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டனர். ஏற்கனவே தனது முதல் போட்டியில் சென்னை கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. அதேபோல 2வது போட்டியிலும் வெற்றி பெறும் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
நாளை இரவு 8 மணிக்குப் போட்டி தொடங்குகிறது. 11 மணியளவில் முடிவடையும்.
போட்டியையொட்டி 15 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் போலி டிக்கெட் விற்போரைக் கண்காணிக்க மப்டி போலீஸாரும் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
மேலும் போட்டி நடப்பதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்னதாகவே சேப்பாக்கம் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும்.
கண்ணாடி பாட்டில்கள், உலோகப் பாத்திரங்கள் உள்ளிட்டவற்றை ரசிகர்கள் கொண்டு செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பட்டாசு வெடிக்க கண்டிப்பாக அனுமதி இல்லை.