பெங்களூர்: ஐபிஎல் தொடரில் பெங்களூர் ராயல் சேலஞ்ர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று இரவு மோதுகின்றன.
பெங்களூரில் இன்று இரவு 8 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது. தோணி தலைமையிலான சென்னை அணி 3 வெற்றிகளுடன் வலுவான அணியாக உள்ளது. 2 போட்டிகளில் தோல்வியை தழுவிய திராவிட் தலைமையிலான ராயல் சேலஞ்ர்ஸ் அணிக்கு இன்றைய போட்டி சவாலாக உள்ளது.
முக்கிய அணியாக கருதப்படும் கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை நேற்று முன் தினம் நடந்த ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற சென்னை அணி வெற்றி நடை போட்டு வருகிறது.
எனவே இந்த அணியை கட்டுக்குள் வைக்க பந்து வீச்சாளர்களை களமிறக்குவது திராவிட் அணிக்கு முக்கியமானதாக உள்ளது. பேட்ஸ்மேன்களின் திறமையும் பெங்களூர் அணியின் வெற்றிக்கு தேவையாக உள்ளது.
மேற்கிந்திய தீவுகளின் சந்தர்பால், தென் ஆப்பிரிகாகவின் காலிஸ் ஆகியோர் இந்த அணியில் பேட்டிங் வரிசையின் நம்பிக்கையாக உள்ளனர்.
தனது தேசிய அணிக்காக விளையாடச் சென்றுள்ள மிஸ்பா உல்ஹக்க்கு பதிலாக இன்றைய ஆட்டத்தில் களமிறங்குகிறார் ராஸ் டெய்லர். சென்னை அணியின் முக்கிய வீரரான மைக் ஹூஷே, கரீபியன் தொடரில் பங்கேற்க சென்றுள்ளார். எனவே அவரும் இன்றைய போட்டில் ஆடமாட்டார்.
இன்றைய போட்டி ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பையும் உற்சாகத்தையும் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.