டெல்லி: வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த்தை கன்னத்தில் அறைந்த விவகாரத்தில் சிக்கியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியின் தற்காலிக கேப்டன் ஹர்பஜன் சிங், ஐபிஎல் தொடரிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். நாளை அவரிடம் டெல்லியில் விசாரணை நடைபெறவுள்ளது.
இதுகுறித்து ஐபிஎல் தலைவர் லலித் மோடி நேற்று இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில், சோனி டிவி வழங்கிய வீடியோ படங்களை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில், போட்டி நடுவர் பரூக் என்ஜீனியர், ஹர்பஜன் சிங்கை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார். உடனடியாக இது அமலுக்கு வருகிறது.
ஹர்பஜன் சிங்கிடம் ஏப்ரல் 28ம் தேதி விசாரணை நடைபெறும். டெல்லி மெளர்யா ஷெரட்டன் ஹோட்டலில் இந்த விசாரணை நடைபெறும். விசாரணையைத் தொடர்ந்து தீர்ப்பினை பரூக் என்ஜீனியர் அறிவிப்பார் என்று தெரிவித்துள்ளார்.
விசாரணை குறித்து பரூக் என்ஜீனியர் கூறுகையில், பிரச்சினையில் தொடர்புடைய அனைவரும் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அனைவரும் தங்களது தருப்பு வாதத்தை எடுத்து வைக்க வாய்ப்பளிக்கப்படும். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் நடத்தை விதிமுறைகளின் படி விசாரணையும், நடவடிக்கையும் எடுக்கப்படும்.
நடந்த சம்பவம் குறித்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நிர்வாகம் முறைப்படி புகார் கொடுத்துள்ளது. அந்தப் புகாரை ஐபிஎல் தலைவரும், ஆணையருமான லலித் மோடி எனக்கு அனுப்பியுள்ளார்.
எனது விசாரணை அறிக்கையை ஐபிஎல் தலைமை ஆணையருக்கு அனுப்பி வைப்பேன் என்றார் பரூக் என்ஜீனியர்.
ஹர்பஜன் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதால் இன்று ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணியுடன் நடக்கும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்பஜன் ஆட முடியாது. ஏற்கனவே சச்சின் டெண்டுல்கர் இல்லாததால் அணி தத்தளித்து வருகிறது.
இந்த நிலையில் ஹர்பஜன் சிங்கும் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதால் மும்பை அணியின் நிலை மேலும் மோசமாகியுள்ளது.