சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் லெவன் இன்று மோதல்

ஐபிஎல் தொடரின் 2ம் நாளான இன்று மொகாலியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியும் மோதிக் கொள்கின்றன.
மாலை 5 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.
இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மகேந்திரசிங் டோணியும், இந்தி நடிகை பிரீதா ஜிந்தாவின் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணிக்கு யுவராஜ் சிங்கும் கேப்டனாக உள்ளனர்.
இந்திய ஒருநாள் போட்டி அணியின் கேப்டனும், துணை கேப்டனும் எதிரும் புதிருமான அணிகளில் இடம் பெற்று மோதுவதால் விறுவிறுப்பு ஏற்பட்டுள்ளது.
உலகின் அதிவேகப் பந்துவீச்சாளரான பிரெட் லீ பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியில் உள்ளார். சென்னை அணியில் ஆஸ்திரேலிய முன்னணி பேட்ஸ்மேன் ஹைடன் உள்ளார்.
இந்த ஆட்டம் குறித்து யுவராஜ் சிங் கூறுகையில், இந்திய அணிக்கு விளையாடும்போதுதான் நானும் டோணியும் நண்பர்கள். ஆனால் இந்த ஆட்டத்தில் அவர் எனக்கு போட்டியாளர்தான்.
இது உணர்ச்சி வேகத்தை தூண்டக்கூடிய புதுமையான போட்டி. ஒவ்வொரு அணியிலும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்களிடமிருந்து நல்ல விஷயங்களைக் கற்றுக்கொள்ள இந்த போட்டி நல்ல வாய்ப்பாகும் என்றார்.
கடந்த டுவென்டி 20 உலகக் கோப்பை போட்டியில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர் அடித்து சாதனை புரிந்த யுவராஜ் இந்த தொடரிலும் பெயரைத் தக்க வைப்பாரா என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
அதிகபட்சமாக ரூ.6 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட டோணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தலைமை தாங்கியுள்ளதால் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த போட்டியில் டோணி விக்கெட் கீப்பராக ஆடப் போவதில்லை. வெறும் பேட்டிங்தான். அவரது அணியில் உள்ள பார்த்தீவ் படேல் விக்கெட் கீப்பிங் செய்வார்.
உலகின் தலைசிறந்த சுழல் பந்துவீச்சாளரான முரளிதரன் சென்னை அணியில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. பிரெட் லீக்கு இவர் ஈடுகொடுப்பார் என்பதால் ஆட்டத்தில் சூடு பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அணி விவரம்:-
சென்னை சூப்பர்கிங்ஸ்- எம்.எஸ். டோணி (கேப்டன்), ஹைடன், ஸ்டீபன் பிளமிங், ஜேக்கப் ஓரம், மைக் ஹஸ்சி, முரளிதரன், சுரேஷ் ரெய்னா, பார்த்தீவ் படேல், ஜோகிந்தர் சர்மா, வித்யுத் சிவராமகிருஷ்ணன், எஸ்.அனிருத்தா, ஆர்.அஸ்வின், எஸ்.ஜகாதி, பி.அமர்நாத், அருண்கார்த்திக், எஸ்.பத்ரிநாத், மன்பிரித் கோனி.
பஞ்சாப் கிங்ஸ் லெவன்- யுவராஜ் சிங் (கேப்டன்), பிரெட்லீ, பியுஷ் சாவ்லா, இர்பான் பதான், ஸ்ரீசாந்த், சங்ககாரா, ரிஷி தவான், ஜேம்ஸ் ஹோப்ஸ், சிமோன் கேடிச், சகில் குக்ரெஜா, ஷான் மார்ஷ், வில்கின் மோதா, லுகே போமர்ஸ்பச், நிதின் சாய்னி, சர்வான், சன்னி சோகல், ஸ்ரீவத்சவா, அஜிதேஸ் அர்கல், பங்கஜ் தர்மானி, கரன் கோயல், ஜெயவர்த்தனே, உதய் கவுல், மில்ஸ், விக்ரம் சிங்.
2வது மேட்ச்
டெல்லி பெரோஷ் கோட்லா மைதானத்தில் சேவாக் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணியும், ஷேன் வார்னே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த ஆட்டம் இரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது.
ராஜஸ்தான் அணியில் இடம்பெற்றுள்ள தென் ஆப்பிரிக்க கேப்டன் ஸ்மித், பாகிஸ்தானின் யூனிஸ்கான், கம்ரன் அக்மல் ஆகியோர் சொந்த நாட்டில் போட்டிகள் நடப்பதால் இன்றைய ஆட்டத்தில் விளையாடவில்லை.
இதேபோல் டெல்லி அணியின் தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மென் டிவில்லியர்ஸ், பாகிஸ்தான் கேப்டன் சோயிப் மாலிக், முகமது ஆசிப் ஆகியோரும் இன்று விளையாடப் போவதில்லை.
அணிகள் விவரம்:
டெல்லி டேர் டெவில்ஸ்- வீரேந்திர சேவாக் (கேப்டன்), தில்ஷான், பிரெட் கீவெஸ், வெட்டோரி, மெக்ராத், யோ மகேஷ், அமித் மிஸ்ரா, மோகேஷ் நகர், மனோஜ் திவாரி, தேஜஷ்வி யாதவ், ராஜத் பாட்டியா, ஷிகர் தவான், காம்பீர், தினேஷ் கார்த்திக், மகரூப், மதுன் மன்காஸ், பிரதீப் சங்க்வான், மாயன்க் தெலான்.
ராஜஸ்தான் ராயல்ஸ்- ஷேன் வார்னே (கேப்டன்), அஸ்னோட்கர், சுமித் கத்ரி, ஜஸ்டின் லாங்கர், மாஸ்கரனாஸ், முனாப் படேல், யூசுப் பதான், அனுப் ரெவன்ட்கர், ஜெய்தேவ் ஷா, ஷேன் வாட்சன், ஆதித்யா, ரவீந்திர ஜடேஜா, தருவர் கோக்லி, லீமான், பராக் மோர், பங்கஜ் சிங், தீரஜ் படேல், மகேஷ் ராவத், தினேஷ் சலுன்கே, சித்தார்த் திரிவேதி.
Story first published: Wednesday, December 7, 2011, 17:19 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications