டர்பன்: பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணிக்கு எதிரான ஐபிஎல் டுவென்டி-20 லீக் போட்டியில் கெய்ல் அதிரடியாக பேட் செய்ய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
ஐபிஎல் டுவென்டி-20 தொடர் தென் ஆப்ரிக்காவில் நடக்கிறது. இன்று நடந்த முதல் லீக் போட்டியில் யுவராஜ் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணி, மெக்கலமை கேப்டனாக கொண்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சந்தித்தது.
டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. பஞ்சாப் அணிக்கு துவக்க வீரர்களாக வந்த கோயல்(0), போபரா (15) விரைவில் அவுட்டானார்கள்.
அடுத்து வந்த இர்பான் பதான் அதிரடியாக விளையாடினார். ஒரு சிக்சர், 5 பவுண்டரி உட்பட 17 பந்தில் 32 ரன்கள் எடுத்து, கங்குலி பந்தில் அவுட்டானார். சங்ககரா 26 ரன்கள் எடுத்தார்.
அடுத்த யுவராஜ் 2 சிக்சர், 3 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் எடுத்து, வெளியேறினார். கடைசிகட்டத்தில் அதிரடியாக பேட் செய்த ஜெயவர்தனா 19 பந்தில் 31 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது.
அடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு கெய்ல், மெக்கலம் அதிரடி துவக்கம் தந்தனர். பஞ்சாப் பந்துவீச்சை வெளுத்து வாங்கினார் கெய்ல். மெக்கலம் 16 பந்தில் 21 ரன்கள் எடுத்து அவுட்டானார். கொல்கத்தா அணி 9.2 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 79 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து டக்வொர்த் லீவிஸ் முறைப்படி கொல்கத்தா அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டது. கெய்ல் 44, ஹாட்ஜ் 10 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
மழையால் போட்டி ரத்து...
மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதவிருந்த மற்றொரு போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது.