கிங்ஸ்டவுன்: 2ம் நிலை வீரர்கள் அடங்கிய மேற்கு இந்தியத் தீவுகள் அணியை கிங்ஸ்டவுனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 95 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளது குட்டி அணியான வங்கதேசம்.
வங்கதேசம் பெற்றுள்ள 2வது டெஸ்ட் வெற்றி இது. இதற்கு முன்பு நாலரை ஆண்டுகளுக்கு முன்பு வங்கதேசத்தின் சிட்டகாங் நகரில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வேயை வீழ்த்தி தனது முதல் டெஸ்ட் வெற்றியைப் பெற்றிருந்தது வங்கதேசம். அதுவும் 2ம் நிலை வீரர்களைக் கொண்ட ஜிம்பாப்வே அணி என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கு இந்தியத் தீவுகளுக்கு டெஸ்ட் போட்டிகளில் ஆடச் சென்றுள்ள வங்கதேச அணி, தனது முதல் டெஸ்ட் போட்டியை கிங்ஸ்டவுனில் ஆடியது.
இப்போட்டியில், வங்கதேசம் தனது முதல் இன்னிங்ஸில் 238 ரன்களையும், மேற்கு இந்தியத் தீவுகள் 307 ரன்களையும் எடுத்தன. வங்கதேசம் தனது 2வது இன்னிங்ஸை 345 ரன்களுக்கு இழந்தது.
இதையடுத்து 277 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் மேற்கு இந்தியத் தீவுகள் ஆடத் தொடங்கியது.
ஆனால் வங்கதேசத்தின் சுழற்பந்து வீச்சாளரான 23 வயதேயான மஹமதுல்லா படு அபாரமாக பந்து வீசி மேற்கு இந்தியத் தீவுகளை திணறடித்து விட்டார்.
15 ஓவர்கள் வீசிய அவர் 51 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தி மேற்கு இந்தியத் தீவுகளை சுருட்டினார்.
இதன் காரணமாக 181 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து 95 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது மேற்குஇந்தியத் தீ்வுகள் அணி.
ஷாகிப் அல் ஹசன் 3 விக்கட்கள வீழ்த்திநார்.
இந்த வெற்றியின் மூலம் வங்கசேதம் இந்தத் தொடரில் 1-0என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிரெனடாவில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
மேற்கு இந்தியத் தீவுகள் அணியுடன் 3 ஒரு நாள் போட்டிகள், ஒரு டுவென்டி 20 போட்டியிலும் வங்கதேசம் விளையாடவுள்ளது.
முன்னணி வீரர்கள் சம்பளப் பிரச்சினை காரணமாக ஆட மறுத்து விட்டதால் 2ம் நிலை வீரர்கள் கொண்ட அணியை இந்தத் தொடரில் இறக்கியுள்ளது மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம் என்பது நினைவிருக்கலாம்.