இனி ஐபிஎல் போட்டிகளில் சியர் லீடர்களின் 'டண்டணக்கா' டான்ஸ் கிடையாது
டெல்லி: ஐபிஎல்லை சுத்தப்படுத்தும் வேலையில் பிசிசிஐ இறங்கியுள்ளது. ஐபிஎல் போட்டிகளில் இனி சியர் லீடர்கள் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல போட்டி முடிந்ததும் நடைபெரும் லேட் நைட் பார்ட்டிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கண் கெட்டபின்னர் சூரிய நமஸ்காரம் என்பது இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு முற்றிலும் பொருந்தும். ஏதாவது பெரிய வில்லங்கம் வந்த பின்னர்தான் அதற்குரிய தடுப்பு நடவடிக்கைகளை கிரிக்கெட் வாரியம் எடுக்கும்.
அந்த வகையில், சமீபத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பிய ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங் விவகாரத்தைத் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் பல்வேறு சீர்திருத்தங்களை அது அறிவித்துள்ளது.

சியர் லீடர்கள் இனி கிடையாது
இனிமேல் ஐபிஎல் போட்டிகளில் சியர் லீடர்கள் எனப்படும் நடன அழகிகளுக்குத் தடை விதிக்கப்படுகிறது. இனிமேல் அவர்களது ஆட்டம் இடம் பெறாது.

பார்ட்டியும் கிடையாது
ஒவ்வொரு போட்டி முடிந்ததும் நட்சத்திர ஹோட்டல்களில் வீரர்கள் பார்ட்டியில் ஈடுபடுவார்கள். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், மது விருந்து என தடபுடல் படும். சியர் லீடர்களும் இதில் கலந்து கொள்வர். இதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

யாரும் பார்ட்டிக்குப் போகக் கூடாது
இந்த பார்ட்டிகள் விடிய விடிய நடக்கும். அதில் வீரர்கள், அணியினர் என யாருமே கலந்து கொள்ளக் கூடாது என பிசிசிஐ அறிவித்துள்ளது.

டிரஸ்ஸி்ங் ரூம் பக்கம் யாரும் போகக் கூடாது
அதேபோல வீரர்களின் டிரஸ்ஸிங் அறைப் பகுதிக்கு மற்றவர்கள் செல்வதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

ஜாமர் கருவிகள்
ஸ்டேடியத்தின் உள்ளே ஜாமர் கருவிகளைப் பொருத்துவது, வீரர்கள் காதுகளில் இயர் பிளக்குகளை மாட்டிக் கொள்வதைத் தடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளையும் பிசிசிஐ பரிசீலனை செய்து வருகிறதாம்.
இந்த நடவடிக்கைகளை தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள டால்மியா தலைமையிலான செயல் குழு பரிந்துரைத்துள்ளதாம்.


Click it and Unblock the Notifications