டர்பன்: ஐபிஎல் டுவென்டி-20 தொடரில் ராஜஸ்தான் ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ரெய்னா அதிரடியாக 98 ரன்கள் எடுக்க, சென்னை சூப்பர் கிங்ஸ் 38 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. மற்றொரு போட்டியில் டெல்லி டேர் டெவில்ஸ் அணி, டெக்கான் சார்ஜர்ஸ் அணியை வீழ்த்தியது.
ஐபிஎல் டுவென்டி-20 கிரிக்கெட் தொடர் தென் ஆப்ரிக்காவில் நடக்கிறது. நேற்று நடந்த முதல் லீக் போட்டியில் டெல்லி டேர் டெவில்ஸ் அணி, டெக்கான் சார்ஜர்ஸ் அணியை எதிர்கொண்டது.
டாஸ் வென்ற டெல்லி டேர் டெவில்ஸ் கேப்டன் ஷேவாக் முதலில் பீல்டிங் தேர்வு செய்தார். டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு இதுவரை நல்ல துவக்கம் தந்த கில்கிறிஸ்ட், கிப்ஸ் ஜோடி நேற்று சொதப்பியது. கில்கிறிஸ்ட் (8), கிப்ஸ் (0) பொறுப்பில்லாமல் பேட் செய்தனர்.
அடுத்து வந்த ரோகித் சர்மா 17, சுமன் 23 ரன்களுக்கு அவுட்டானார்கள். கடைசிக்கட்டத்தில் வந்த பிராவோ அணியின் ஸ்கோரை அதிரடியாக உயர்த்தினார். அவர் 2 சிக்சர், 5 பவுண்டரி உட்பட 28 பந்தில் 48 ரன்கள் எடுத்தார். வேணுகோபால் 18 ரன்களுக்கு அவுட்டானார். டெக்கான் சார்ஜர்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது.
அடுத்து பேட் செய்த டெல்லி அணிக்கு ஷேவாக் 20, கம்பீர் 17 ரன்கள் எடுத்து சுமாரான துவக்கம் தந்தனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சதம் கடந்த டிவிலியர்ஸ் நேற்று 5 ரன்களுக்கு அவுட்டாகி ஏமாற்றினர்.
அடுத்து வந்த தினேஷ் கார்த்திக், தில்ஷனுடன் இணைந்து அதிரடி காட்டினார். சூப்பராக பேட் செய்த தினேஷ் கார்த்திக் 30 பந்தில் 41 ரன்கள் எடுத்து அவுட்டானார். அரைசதம் கடந்த தில்ஷன் 52 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். டெல்லி அணி 18.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
ரெய்னா 98- சென்னை அபாரம்...
இரண்டாவது போட்டியில் டோணி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சந்தித்தது. முதலில் பேட் செய்த சென்னை அணிக்கு யூசுப் பதான் அதிர்ச்சி கொடுத்தார். அவர் துவக்க வீரர்கள் ஹைடன் 1, பார்த்திவ் படேலை 3 வரிசையாக அவுட்டாக்கினார்.
அடுத்து வந்த ரெய்னா, ராஜஸ்தான் பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். வரிசையாக சிக்சர்களை விளாசினார். சதம் கடப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இவர் 5 சிக்சர், 10 பவுண்டரிகள் உட்பட 55 பந்தில் 98 ரன்கள் எடுத்து அவுட்டானார். சதத்தை 2 ரன்களில் நழுவவிட்டார்.
இவருக்கு பத்ரிநாத் 29, டோணி 22 ஓரளவு ஒத்துழைப்பு தந்தனர். சென்னை அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. மோசமாக பந்துவீசிய ராஜஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் கம்ரான் கான் வெறும் 2.4 ஓவரில் விக்கெட் எதுவும் கைப்பற்றாமல் 35 ரன்கள் விட்டுகொடுத்தார்.
பாலாஜி 4 விக்கெட்...
அடுத்த ராஜஸ்தான் ராயல்ஸ் பேட் செய்தது. பந்துவீச்சிலும் அசத்திய ரெய்னா துவக்கம் வீரர் குயினே (28) விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்து வந்த முக்கிய வீரர்களை பாலாஜி வெளியேற்றினார். ரவிந்திர ஜடோஜா 37, யூசுப் பதான் 20 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் விரைவில் வெளியேறினர்.
ராஜஸ்தான் அணி 19.3 ஓவரில் 126 ரன்களுக்கு ஆட்டத்தை முடித்து கொண்டது. சென்னை அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. சூப்பராக பந்துவீசிய பாலாஜி 4 விக்கெட் வீழ்த்தினார்.