விறுவிறு இறுதிப் போட்டியில் ராஜஸ்தான் சாம்பியன் ஆனது

ஐபிஎல் டுவென்டி 20 தொடரின் இறுதிப் போட்டி நேற்று மும்பை பாட்டீல் ஸ்டேடியத்தில் நடந்தது. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஷேன் வார்னே, முதலில் சென்னையை பேட் செய்யப் பணித்தார்.
சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரரான பார்த்திவ் படேல் சிறப்பாக ஆடினார். ஆனால் மறு முனையில் வித்யூத் சிவராமகிருஷ்ணன் 16 ரன்களில் ஆட்டமிழந்தார்.
படேலும், சுரேஷ் ரெய்னாவும் சிறப்பாக ஆடினர். படேல் 38 ரன்களைக் குவித்தார். ரெய்னா ரன் மழை பொழிந்து 43 ரன்களை எடுத்தார். பின்னர் வந்த மார்க்கல் 16 ரன்களில் வீழ, டோணி சற்று நிலைத்து ஆடி 29 ரன்களைக் குவித்தார். மற்ற வீரர்கள் சொல்லிக் கொள்ளும்படி ரன்களைச் சேர்க்கவில்லை.
இறுதியில், 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன்களை எடுத்தது சென்னை. ராஜஸ்தான் தரப்பில் யூசுப் பதான் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்களை சாய்த்தார்.
பின்னர் ஆடத் தொடங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் அஸ்னோத்கர் 28 ரன்களைக் குவித்தார். ஷேன் வாட்சன் 28 ரன்களை எடுக்க, யூசுப் பதான் மீண்டும் ஒரு அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதிரடியாக ஆடிய அவர் 56 ரன்களைக் குவித்து ரன் அவுட் ஆனார்.
இந்த நிலையில், ராஜஸ்தான் அணி கைப், ஜடேஜா ஆகியோரை அடுத்தடுத்து இழந்து இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டது. இதனால் சென்னைக்கு சாதகமாக நிலைமை மாறியது.
கையில் 3 விக்கெட்கள் மட்டுமே இருந்த நிலையில் கடைசி 2 ஓவர்களில் 18 ரன்களை எடுக்க வேண்டிய நிலையில் ராஜஸ்தான் இருந்தது. ஆனால் சமயோஜிதமாக விளையாடிய ராஜஸ்தான் வீரர்கள் 19வது ஓவரில் 10 ரன்களை எடுத்து விட்டனர்.
கடைசி ஓவரில் 8 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் அந்த ஓவரை பாலாஜி போட்டார். ஒவ்வொரு பந்தையும் வீணாக்காமல் ரன் எடுத்த ராஜஸ்தான் அணி, 5வது பந்தில் ஸ்கோரை சமன் செய்தது. 6வது பந்தில் ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலை. பாலாஜி போட்ட பந்தை அடித்த தன்வீர், அந்த பந்தில் ஒரு ரன் எடுத்து ராஜஸ்தானை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றார்.
மிகவும் திரில்லிங்காக இருந்த இந்த ஓவரில் ராஜஸ்தான் அணி சிறப்பாக செயல்பட்டதால் வெற்றி அவர்கள் வசமானது. சென்னை வீரர்கள் பெரும் ஏமாற்றத்தில் மூழ்கினர்.
ஐபிஎல் தொடரின் முதலாவது சாம்பியன் பட்டத்தை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ரூ. 4.8 கோடி பரிசுத் தொகையும், வைரம், பவளம், மாணிக்கம் பதித்த கோப்பையும் பரிசாக வழங்கப்பட்டது. சென்னை அணிக்கு ரூ. 2.4 கோடி பரிசுத் தொகை கிடைத்தது.
ஆட்ட நாயகன் - தொடர் நாயகன்:
இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகனாக யூசுப் பதான் தேர்வு செய்யப்பட்டார். இவர் நேற்றைய போட்டியில் 3 விக்கெட்களை சாய்த்து, 56 ரன்களையும் குவித்து அசத்தியிருந்தார்.
தொடர் நாயகனாக ஆஸ்திரேலிய வீரரும், ராஜஸ்தான் அணியைச் சேர்ந்தவருமான ஷேன் வாட்சன் தேர்வானார். அவர் இத்தொடரில் 19 விக்கெட்களை சாய்த்து, 472 ரன்களையும் குவித்தார்.
கண்கவர் நிறைவு நிகழ்ச்சி:
முன்னதாக, போட்டி தொடங்குவதற்கு முன்பாக கண்கவர் நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது.
பாலிவுட் ஸ்டார்களான ஷமீதா ஷெட்டி, சமீரா ரெட்டி, அம்ரிதா அரோரா, தியா மிர்ஸா ஆகியோர் கலக்கல் நடனம் ஆடினர். சல்மான்கான் 24 டான்ஸர்களுடன் இணைந்து ஆடிய நடனம் அனைவரையும் கவர்ந்தது.
இதுதவிர ஜெர்மனியைச் சேர்ந்த 8 கலைஞர்கள் நிகழ்த்திய நடனமும், அக்ரோபாட்டிக் நடனமும் அனைவரையும் கவர்ந்தது.
இதுதவிர நான்கு பாரா கிளைடர்களின் கலக்கல் நிகழ்ச்சியும் இடம் பெற்றது.
நிகழ்ச்சியில், பேசிய ஐபிஎல் தலைவரும், கமிஷனருமான லலித் மோடி, இந்த ஆண்டே 2வது டுவென்டி 20 தொடர் நடத்த திட்டமிட்டப்பட்டது. ஆனால் அதற்கு பலரும் அதிருப்தி தெரிவித்தனர். எனவே இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் இருக்காது. மாறாக, அடுத்த ஆண்டு நடைபெறும்.
ஐபிஎல் தொடர் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்துள்ளது திருப்தியும், மகிழ்ச்சியும் தருகிறது. அடுத்த ஆண்டு நடைபெறும் 2வது தொடர் இன்னும் சிறப்பாக அமையும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்தார்.
இந்தக் கலை நிகழ்ச்சிகள் முடிய சற்று தாமதமானதால் இறுதிப் போட்டி எட்டே கால் மணிக்கே தொடங்கியது.
Story first published: Wednesday, December 7, 2011, 17:18 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications