மும்பை: ஐபிஎல் டுவென்டி 20 தொடரில் இன்று முதல் அரை இறுதி ஆட்டம் நடைபெறுகிறது.
ஐபிஎல் டுவென்டி 20 கிரிக்கெட் திருவிழாவில் உச்சகட்டப் போட்டிகள் இன்று தொடங்குகின்றன. மும்பையில் இன்று முதலாவது அரை இறுதிப் போட்டி நடைபெறுகிறது.
டெல்லி டேர் டெவில்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதும் இந்தப் போட்டி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடரில் முதலிடத்தைப் பிடித்துள்ள வலுவான அணியாகும். டெல்லி அணி 4வது இடத்தில் உள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஆரம்பத்திலிருந்தே அதிரடியாகி ஆடி வந்த அணி. டெல்லி அணி இடையில் சிறிது தடுமாற்றத்தை சந்தித்து பின்னர் அரை இறுதிக்கு முன்னேறியது.
இந்த நிலையில் இரு அணிகளும் மோதும் இந்தப் போட்டி மிகவும் விறுவிறுப்பான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் அணியின் பெரிய பலமே அதன் கேப்டனான ஷேன் வார்னேதான். அருமையான முறையில் இவர் தனது கேப்டன் பணியை ஆற்றி வருகிறார். பந்து வீச்சிலும் தனது பலம் இன்னும் போகவில்லை என்பதை நிரூபித்துள்ளார்.
ஸ்மித், அஸ்னோத்கர் ஆகியோர் ராஜஸ்தான் அணிக்குக் கிைடத்துள்ள சிறப்பான ஓபனர்கள் ஆவர். யூசுப் பதான், ஷான் வாட்சன், கம்ரன் அக்மல் ஆகியோர் அணிக்கு வலுவான அடித்தளத்தை ஏற்படுத்தித் தருபவர்களாக திகழ்கின்றனர்.
பந்து வீச்சில் சொஹைல் தன்வீர் மிரட்டுகிறார்.
இத்தனை வலுவான வீரர்களைக் கொண்டுள்ள ராஜஸ்தான் அணிக்கு சற்றும் இளைத்ததாக டெல்லி தெரியவில்லை.
ஓபனர்களான கேப்டன் ஷேவாக்கும், கெளதம் காம்பீரும் நம்பிக்கை நட்சத்திரங்களாக உள்ளனர். இவர்கள் தவிர அப் டிவில்லியர்ஸ், ஷிகார் தவான், மனோஜ் திவாரி, திலகரத்னே தில்ஷன் ஆகிய வலுவான வீரர்களும் உள்ளனர்.
மெக்கிராத், யோ மகேஷ், பிரதீப் சங்வான் ஆகியோர் பந்து வீச்சில் பலத்தைக் காட்டுகின்றனர்.
திணேஷ் கார்த்திக் கீப்பிங்கில் கலக்குகிறார். கூடவே பிரமிப்பூட்டும் பேட்டிங்கையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
இரு அணிகளிலும் சில குறைகள், பல நிறைகள் உள்ளன. இதைத் தாண்டி இறுதியில் வென்று, இறுதிப் போட்டிக்கு முன்னேற் போவது யார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் போட்டியைக் காண ஆயத்தமாக உள்ளனர்.