மெல்போர்ன்: கொல்கத்தாவில் நடந்த ஐபிஎல் போட்டியின்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் செளரவ் கங்குலியை, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஷேன் வார்னே கிண்டல் செய்ததாக செய்தி வெளியாகியுள்ளது.
கொல்கத்தாவில் இரு அணிகளுக்கும் இடையே நடந்த போட்டியின்போது தான் அவுட் ஆனதை ஏற்காமல் நடுவருடன் வாதிட்டார் கங்குலி. இதுதொடர்பாக கங்குலியை கடுமையாக விமர்சித்திருந்தார் வார்னே.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரு அணிகளும் மீண்டும் மோதின. இப்போட்டியிலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியே வென்றது. அப்போது கங்குலி பேட் செய்து கொண்டிருந்தபோது அவரது சட்டைப் பையிலிருந்து சில பேப்பர்கள் கீழே விழுந்தன.
அதை எடுத்த வார்னே, கங்குலியைப் பார்த்து ஏதோ சொல்லி கேலி செய்துள்ளார். இதைக் கேட்டதும் முகம் இருண்ட கங்குலி, வார்னேவை நோக்கி நடந்து வந்தார். அதன் பின்னர் அவரிடம் அந்த பேப்பர்களை கொடுத்தார் வார்னே. வாங்கிய கங்குலி விருட்டென திரும்பவும் தனது இடத்திற்குச் சென்றார்.
இந்தச் செய்தியை ஆஸ்திரேலியன் அசோசியேட்டட் பிரஸ் வெளியிட்டுள்ளது.