
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறப்போவதாக சச்சின் அறிவித்ததை அவரது ரசிகர்களால் இன்னும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ரஞ்சி டீமில் அவர் ஆடினாலும் திருமணத்தைக் கூட நிறுத்திவிட்டு வந்து அவரது ஆட்டத்தை பார்க்கும் ரசிகர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.
சரி அதை விட்டுவிடுவோம் இப்போது சச்சின் மகன் அர்ஜூன் கிரிக்கெட் விளையாட வந்துவிட்டார் என்பதுதான் முக்கியமான செய்தி. 14 வயதுக்குட் பட்டோருக்கான மும்பை அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். வரும் 20 தேதி அகமதாபாத்தில் நடைபெறும் போட்டியில் விளையாடப்போகிறார் அர்ஜூன் சச்சின்.
அர்ஜூன் முதன் முதலாக புனேயில், நடைபெற்ற கேடன்ஸ் கோப்பைக்கான விளையாட்டுப்போட்டியில் அறிமுகமானார். தனது முதல் ஆட்டத்தில் அர்ஜுன் 39 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தார். அன்று முதல் மீடியாக்களின் பார்வையில் வர ஆரம்பித்தார் அர்ஜுன்.
2012ம் ஆண்டு ஜூன் மாதமே மும்பை கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில் 14 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்யும் போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டியில் 12 வயதே ஆன அர்ஜுன் டெண்டுல்கர் கலந்துகொண்டார்.
இந்த போட்டியில் ஒரு சிக்சர், 14 பவுண்டரிகள் உட்பட மொத்தம் 124 ரன்கள் எடுத்து தனது அணி இறுதிப்போட்டிக்குள் நுழைய உதவினார். இந்த சிறப்பான ஆட்டமே இவரை 14 வயதுக்குட்பட்டோருக்கான வீரர்கள் தகுதிப் பட்டியலில் இடம் பிடிக்க செய்துள்ளது.
இடது கையில் பந்து வீசும் பழக்கமுள்ள அர்ஜுன், அடுத்து 2011-ல் நடைபெற்ற மற்றொரு போட்டியில் சிறப்பாக பந்து வீசி 22 ரன்கள் கொடுத்து 8 விக்கெட்டுகள் எடுத்ததிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
அர்ஜுனின் கிரிக்கெட் ஆட்டத்தை சச்சின் தன் செல்போனில் படம் பிடித்து அதை அவருக்கு போட்டு காண்பித்து தவறுகளைத் திருத்திக் கொள்ள உதவுவாராம்.
அர்ஜூன் தனது அப்பா சச்சினுடன் பலமுறை இந்திய அணியின் பயிற்சி முகாம்களில் பங்கேற்றிருக்கிறார். தவிர இந்திய வீரர்களுடனும் அவர் பயிற்சிகளில் பங்கேற்றுள்ளார். இதுவே மும்பை அணியில் அர்ஜூன் இடம் பெற காரணமாக அமைந்திருக்கலாம் என்கின்றனர். வரும் 20 தேதி அகமதாபாத்தில் நடைபெறும் போட்டியில் விளையாடப்போகிறார் அர்ஜூன் சச்சின் அவரும் அப்பாவைப் போல அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவாரா? பொறுத்திருந்து பார்க்கலாம்.