சச்சின் சதம்-முத்தரப்பு கோப்பை வென்றது இந்தியா

இலங்கை, இந்தியா, நியூசிலாந்து அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு தொடர் இலங்கையில் நடந்தது. நேற்று நடந்த பைனலில் இந்தியா, இலங்கை மோதின.
கடைசி லீக் போட்டியில் இலங்கையிடம் தோல்வியடைந்த இந்தியா வெற்றி பெறும் முனைப்புடன் களம் கண்டது. அதே நேரத்தில் டாஸூம் கைகொடுக்க, நம்மவர்கள் முதலில் பேட்டிங் செய்தனர்.
சச்சின் 44வது சதம்...
இப்போட்டிக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டு, விராத் கோஹ்லி இடம்பிடித்தார். இதையடுத்து சச்சினுடன், டிராவிட் ஆட்டத்தை துவக்கினார்.
சூப்பராக விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 95 ரன்கள் எடுத்த நிலையில் டிராவிட் அவுட்டானார். அவர் 1 சிக்சர், 2 பவுண்டரி உட்பட 39 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
அடுத்து வந்த கேப்டன் டோணி, சச்சினுக்கு நல்ல ஒத்துழைப்பு தந்தார். அவர் 62 பந்தில் 56 ரன்கள் எடுத்து மலிங்கா வேகத்தில் வெளியேறினார்.
மறுமுனையில் சூப்பராக விளையாடிய சச்சின் சதம் கடந்தார். இது ஒரு நாள் போட்டிகளில் அவரது 44வது சதமாக அமைந்தது. அவர் 133 பந்தில் 138 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
கடைசிக்கட்டத்தில் இலங்கை பந்துவீச்சை வெளுத்து வாங்கிய யுவராஜ் 1 சிக்சர், 5 பவுண்டரி உட்பட 41 பந்தில் 56 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 319 ரன்கள் எடுத்தது.
ஹர்பஜன் 5 விக்கெட்...
அடுத்து பேட் செய்த இலங்கை அணிக்கு ஜெயசூர்யா, தில்ஷன் ஜோடி அதிரடி துவக்கம் தந்தது. இலங்கையின் ரன்வேகம் விறுவிறுவென அதிகரித்தது. இதையடுத்து கேப்டன் டோணி பந்தை ஹர்பஜன் கையில் கொடுத்தார்.
கேப்டன் நம்பிக்கை பூர்த்தி செய்த ஹர்பஜன் தில்ஷனை வெளியேற்றினார். தில்ஷன் 29 பந்தில் 42 ரன்கள் எடு்ததார். அவரை தொடர்ந்து ஜெயவர்தனேவும் 1 ரன்னுக்கு வெளியேறினார். ஜெயசூர்யா 29 பந்தில் 36 ரன்கள் எடுத்தார்.
சங்ககரா 33, கந்தம்பி 66, கபுகேதரா 35 இந்திய பவுலர்களுக்கு சவால் கொடுத்தனர். இலங்கை இறுதியில் 46.4 ஓவரில் 273 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இந்திய அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, கோப்பை கைப்பற்றியது. இந்தியா சார்பில் சூப்பராக பந்துவீசிய ஹர்பஜன் 5 விக்கெட் வீழ்த்தினார்.
ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது சச்சினுக்கு வழங்கப்பட்டது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:30 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications